உலக செய்திகள்

மெக்சிகோவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

மெக்சிகோவில் நேற்று இரவு ரிக்டர் 7.1 மற்றும் 6.1 அளவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோவில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சமும் பரபரப்பும் நிலவியது. பல பகுதிகளில் கட்டிடங்கள் பலமாக குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.

சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தேசிய நில அதிர்வு மையத்தின் தகவலின்படி, முதல் நிலநடுக்கம் நேற்று இரவு இந்திய நேரப்படி 8.18 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானது. அதனைத் தொடர்ந்து, சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு இரவு 8.50 மணியளவில் மீண்டும் 6.1 ரிக்டர் அளவில் மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

தொடர்ச்சியாக ஏற்பட்ட நில அதிர்வுகளால் மெக்சிகோவின் பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியதால், மக்கள் மத்தியில் பதற்றமான சூழல் நிலவியது. மேலும், இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் மெக்சிகோவை ஒட்டியுள்ள சில அண்டை நாடுகளிலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் அல்லது காயமடைந்தோர் குறித்த முழுமையான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.