உலக செய்திகள்

வடக்கு மாசிடோனியாவில் அன்னை தெரசா நினைவிடத்தை பார்வையிட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு

ஸ்கோப்ஜே அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி உருவச்சிலையை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைத்தார்.

ஸ்கோப்ஜே,

ஜனாதிபதி திரவுபதி முர்மு மூன்று நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 20-ந்தேதி மால்டோவா நாட்டிற்கு சென்ற அவர், அந்நாட்டின் அதிபர் மயா சந்துவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

மால்டோவா பயணத்தை நிறைவு செய்த பின்னர், வடக்கு மாசிடோனியா அதிபர் கோர்டானா சில்ஜனோவ்ஸ்கா-டாவ்கோவா அழைப்பின் பேரில் ஜனாதிபதி திரவுபதி முர்மு 21-ந்தேதி(நேற்று) வடக்கு மாசிடோனியாவிற்கு சென்றார். இந்திய ஜனாதிபதி ஒருவர் மால்டோவா மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகளுக்கு மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணம் இதுவாகும். வடக்கு மாசிடோனியாவில் திரவுபதி முர்மு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இன்று அங்குள்ள ஸ்கோப்ஜே நகரில் அமைந்திருக்கும் அன்னை தெரசா அருங்காட்சியகத்திற்கு திரவுபதி முர்மு சென்றார். இது தொடர்பாக இந்திய ஜனாதிபதி மாளிகையின் ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “ஜனாதிபதி திரௌபதி முர்மு, வடக்கு மாசிடோனியாவின் அதிபர் கோர்டானா சில்ஜனோவ்ஸ்கா-டாவ்கோவாவுடன் இணைந்து ஸ்கோப்ஜேவில் உள்ள அன்னை தெரசா நினைவிடத்தைப் பார்வையிட்டார். அன்னை தெரசா ஸ்கோப்ஜேவில் பிறந்தார். அவர் 1928-ஆம் ஆண்டு வரை அங்கு வசித்து வந்தார்” என்று பதிவிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஸ்கோப்ஜே அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி உருவச்சிலையை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைத்தார். இது குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறுகையில், “உலகத்தில் தற்போது மோதல்கள், சகிப்புத்தன்மையின்மை மற்றும் பிளவுகள் அதிகரித்துள்ள காலத்தில், பேச்சுவார்த்தை, கருணை மற்றும் அமைதியான வாழ்வு ஆகியவற்றின் மீதான காந்தியடிகளின் நம்பிக்கை மிகவும் பொருத்தமானதாக திகழ்கிறது.

மகாத்மா காந்தி இந்தியாவைச் சேர்ந்தவர், ஆனால் அவரது செய்தி முழு மனிதகுலத்திற்கும் உரியது. இந்த சிலை இந்தியாவுக்கும் வடக்கு மாசிடோனியாவுக்கும் இடையிலான நட்புறவின் நீடித்த சின்னமாகவும், அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் மனிதாபிமானம் ஆகியவற்றில் இரு நாடுகளும் கொண்டுள்ள நம்பிக்கையின் சின்னமாகவும் விளங்கும்” என்று தெரிவித்தார்.