வாஷிங்டன்,
அமெரிக்காவின் தேர்தல் நடைமுறை குறித்து விமர்சித்த டொனால்டு டிரம்ப், இந்தியாவில் நடைபெறாத ஒரு தேர்தலை நடைபெற்றதாகக் குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது அந்நாட்டில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது: “இந்திய அதிபர் தேர்தலில் 12.5 கோடி பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்த சிறிது நேரத்திலேயே அதே நாளில் முடிவுகள் வெளியாகின. அமெரிக்காவில் தேர்தல் முடிவுகளை கணக்கிடுவதற்கு பல வாரங்கள் ஆகின்றன. அமெரிக்காவில் வாக்குப்பதிவு ஊழல் நிறைந்ததாக உள்ளது”என்று விமர்சித்து இருந்தார்.
டிரம்ப் குறிப்பிட்ட 12.5 கோடி வாக்குகள் தொடர்பான தரவுகள் பிரேசில் அதிபர் தேர்தலுடன் ஒத்துப்போகின்றன என்று நெட்டிசன்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். பிரேசிலில் நேற்று அதிபர் தேர்தலின் முதல் சுற்றில் 12.527 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்ததும் முடிவுகள் வெளியாகத் தொடங்கின. எனவே இதனை குறிப்பிட்டே டிரம்ப், இந்தியா என குறிப்பிட்டு தவறுதலாக பதிவிட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.
அமெரிக்காவில் தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்துவதற்காக, இந்திய தேர்தல் முறையை ஏற்கனவே டிரம்ப் பதிவிட்டு இருக்கிறார். குறிப்பாக இந்தியாவின் வாக்காளர் அடையாள அட்டை நடைமுறையை அவர் சுட்டிக்காட்டியிருந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், அமெரிக்காவில் புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் எப்படி தேர்தல் நடத்த முடியும் என்று தனது நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.