பீஜிங்,
ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு(APEC) அமைப்பின் 33-வது உச்சிமாநாடு, வரும் 18-ந்தேதி(இன்று) மற்றும் 19-ந்தேதி(நாளை) ஆகிய இரு தேதிகளில் நடைபெற உள்ளது. 21 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த அமைப்பில் அமெரிக்கா, சீனா, ரஷியா போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன.
சீனாவின் குவாங்டொங் மாகாணம் சென்சென் நகரில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் ஆகியோர் நேற்று சீனா சென்றடைந்தனர். ரஷியா-உக்ரைன் மற்றும் அமெரிக்கா-ஈரான் இடையே மோதல்கள் நீடித்து வரும் சூழலில், ரஷியா, சீனா மற்றும் அமெரிக்காவின் அதிபர்கள் பங்கேற்கும் இந்த மாநாடு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில், ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டின் 2-வது நாள் அமர்வு இன்று நடைபெற்றது. இதில் உலகின் 3 முக்கிய அணு ஆயுத நாடுகளான அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனாவின் அதிபர்களான டிரம்ப், புதின் மற்றும் ஜின்பிங் ஆகியோர் இடையிலான முத்தரப்பு சந்திப்பு நடைபெற்றது.
ஆசிய-பசிபிக் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த சந்திப்பின்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில், “இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு. நாம் மூவரும் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன. பேச்சுவார்த்தைகளை தவிர்ப்பதால் ஒருபோதும் அமைதி ஏற்படாது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ரஷிய அதிபர் புதின், “உக்ரைன் மோதல் உள்பட, பிராந்திய மோதல்களை தீர்ப்பதில் 3 நாடுகளுக்கும் பொதுவான நலன்கள் ஏராளமாக இருக்கின்றன” என்று தெரிவித்தார்.
இதையடுத்து சீன அதிபர் ஜின்பிங் பேசுகையில், “பெரும் வல்லரசுகள் நல்லிணக்கத்துடன் வாழும்போது, உலகம் அமைதியாக இருக்கும். பெரும் வல்லரசுகள் மோதிக்கொள்ளும்போது, உலகத்தில் குழப்பங்கள் ஏற்படும். இதுவே வரலாறு நமக்கு சொல்லும் செய்தி” என்று தெரிவித்தார்.