ரோம்,
ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நெதர்லாந்து, சுவீடன் மற்றும் நார்வே நாடுகளுக்கு பிரதமர் மோடி சென்றார். இதில், நெதர்லாந்துக்கான பயணத்தின் ஒரு பகுதியாக, இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டன.
தொடர்ந்து, சுவீடன் நாட்டுக்கு அவர் புறப்பட்டார். இந்த பயணத்தில், சுவீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் மற்றும் பிற ஐரோப்பிய தலைவர்களையும், சுவீடனின் தலைமை செயலதிகாரிகளையும் சந்தித்து, வர்த்தகம், முதலீட்டை வலுப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்புடன் செயல்படுவது பற்றி பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.
சுவீடன் பயணம் நிறைவடைந்ததும், பிரதமர் மோடி நார்வே நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். அப்போது, நார்வேயின் உயரிய கவுரவம் என கூறப்படும் கிராண்ட் கிராஸ் ஆப் தி ராயல் நார்வீஜியன் ஆர்டர் ஆப் மெரிட் என்ற விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
தனது நார்வே பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, அடுத்ததாக இத்தாலி நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். அந்நாட்டின் தலைநகரான ரோம் நகரில், பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக விமான நிலையத்தில் பிரதமர் மோடியை இத்தாலி நாட்டின் துணை பிரதமர் அண்டோனியோ தஜானி நேரில் சென்று வரவேற்றார்.
தொடர்ந்து, இத்தாலியில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரை சந்தித்து பிரதமர் மோடியை கலந்துரையாடினார். அதோடு, பிரதமர் மோடியின் வருகையையொட்டி இத்தாலியை சேர்ந்த நடனக் கலைஞர்கள் இந்திய கலாசார நடனங்களையும், இசைக்கச்சேரியையும் நிகழ்த்தி பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர். இந்த பயணத்தின்போது இத்தாலி நாட்டின் அதிபர் செர்ஜியோ மட்டாரெல்லா, பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோரை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.