இனி வீடியோக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் செயலியின் முகப்புப் பக்கம் மாற்றப்பட உள்ளது. இந்த மாற்றம் அனைத்து பயனர்களுக்கும் உடனடியாக அறிமுகப்படுத்தப்படவில்லை.
சமூக வலைத்தளங்கள் ஆதிக்கம் செலுத்த துவக்க நாட்களில் அதிகம் பேர் பயன்படுத்திய சமூக வலைத்தளமாக பேஸ்புக் இருந்தது. புகைப்படங்கள் பதிவேற்றுவது, பதிவுகள் இடுவது போன்ற வசதிகளுடன் அறிமுகம் ஆன பேஸ்புக்கில், படிப்படியாக சாட்டிங் வசதி, வீடியோ கால் வசதி போன்றவைகளும் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் போன்ற குறுகிய வீடியோக்களுக்கு அதிக ஆர்வம் இருப்பதால் பேஸ்புக்கிலும் இனி வீடியோவுக்கே முன்னுரிமை அளிக்க மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தற்போது பேஸ்புக் செயலியைத் திறந்ததும் நண்பர்கள் பகிரும் பதிவுகள், புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவை ஹோம் பேஜில் தோன்றுகின்றன. இதை மாற்றி இனி வீடியோக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் செயலியின் முகப்புப் பக்கம் மாற்றப்பட உள்ளது. இந்த மாற்றம் அனைத்து பயனர்களுக்கும் உடனடியாக அறிமுகப்படுத்தப்படவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே முதற்கட்டமாக இந்த வசதியைப் பயன்படுத்த முடியும். விருப்பமில்லாதவர்கள் வழக்கமான நியூஸ் ஃபீடு முறைக்கு மாறிக்கொள்ளும் வசதியும் இருக்கும் என்று கூறப்படுகிறது.