உலக செய்திகள்

கட்டணம் செலுத்தி செல்லும் கப்பல்களுக்கு முன்னுரிமை: ஈரான் அறிவிப்பு

அமெரிக்க படைகளின் உத்தரவை ஏற்று 21 கப்பல்கள் திரும்பி ஈரானுக்கே சென்றுள்ளன என அமெரிக்கா தெரிவித்தது.

தெஹ்ரான்

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது.

எனினும் ஈரான், அமெரிக்கா இடையே நிரந்தர போர் நிறுத்தத்திற்காக பாகிஸ்தானில் கடந்த வாரம் 21 மணிநேரம் நீடித்த தொடக்க கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது என அமெரிக்கா தெரிவித்தது.

இதனை தொடர்ந்து, ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடுவதுடன், நீடித்த பொருளாதார நெருக்கடி நீடிக்கும் என அமெரிக்கா தெரிவித்தது. இதனால், மேற்காசிய பகுதியில் மீண்டும் பதற்றம் கூடியுள்ளது.

ஈரான் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அப்படியில்லாமல் அதிருப்தி ஏற்படும் வகையிலான வழியை தேர்ந்தெடுக்கும் என்றால், அவர்களை முற்றுகையிடுவதுடன், உள்கட்டமைப்பு, மின்சாரம் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீது குண்டுகள் வீசி தாக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிப்பும் வெளியிட்டார்.

எனினும், ஹார்மூஸ் ஜலசந்தியில் ஈரான் முன்பே வரையறுத்துள்ள வழியின் மூலம் கப்பல் போக்குவரத்து நடைபெறும் என்றும் ஈரானின் துறைமுகங்களை முடக்கும் அமெரிக்காவின் நடவடிக்கை தொடர்ந்து நீடிக்கும் என்றால், அதற்கு பதிலடி நடவடிக்கைகளை எடுக்போம் என ஈரான் எச்சரித்தது.

ஹார்மூஸ் ஜலசந்தியின் பாதுகாவலர் நாங்களே என்றும் அதனை கடந்து செல்லும் அனைத்து கப்பல்களும் தங்களுடைய முன் அனுமதியை பெற வேண்டும் என்றும், நாடுகளின் கப்பல்கள் அங்கீகரிக்கப்பட்ட ஈரானிய வழிகளிலேயே செல்ல அனுமதிக்கப்படும் என்றும் ராணுவ கப்பல்களுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்படும் என்றும் ஈரான் தெரிவித்தது.

எனினும், முற்றுகையை தொடர்ந்து, அமெரிக்க படைகளின் உத்தரவை ஏற்று 21 கப்பல்கள் திரும்பி ஈரானுக்கே சென்றுள்ளன என அமெரிக்கா தெரிவித்தது.

அமெரிக்கா மற்றும் ஈரான் என இருதரப்புக்கு இடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்ட போதிலும் அதனை மீறும் வகையில் அமெரிக்கா தொடர்ந்து செயல்படுகிறது என ஈரான் குற்றச்சாட்டு தெரிவித்தது.

இதனை தொடர்ந்து ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் மூடியது. இதன் தொடர்ச்சியாக, ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்து செல்ல கூடிய கப்பல்களுக்கு ஈரான் மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்தது. இது அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சூழலில், ஈரானை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் சி.என்.என். செய்தியாளரிடம் பேசும்போது, ஹார்மூஸ் ஜலசந்தியின் புதிய ஒழுங்கு முறைகளை ஏற்று, பாதுகாப்பு சேவைகளுக்கான கட்டணம் செலுத்த கூடிய கப்பல்களுக்கு முன்னுரிமை கொடுக்க ஈரான் முடிவு செய்துள்ளது என்று கூறினார். இதன்படி, ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்து செல்ல கட்டணம் செலுத்த ஒப்பு கொள்ளும் கப்பல்களை முதலில் கடந்து செல்வதற்கு ஈரான் அனுமதி அளிக்கும்.

அப்படி கட்டணம் செலுத்த மறுக்கும் கப்பல்கள் கடந்து செல்வது தள்ளிவைக்கப்பட்டு, அனுமதி அளிப்பது பின்னர் பரிசீலிக்கப்படும் என கூறப்படுகிறது.