ரோம்:
இத்தாலியில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பொதுச் சேவைகளின் தரம் குறித்த அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் கடந்த வார இறுதியில் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக, மிலன் நகரில் நடைபெற்ற போராட்டங்களின்போது வன்முறை வெடித்தது.
மிலன் நகரின் மையப் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது, சிலர் கடைகளின் கண்ணாடிகளை உடைத்து பொருட்களைக் கொள்ளையடித்தனர். மேலும், குப்பைத் தொட்டிகளுக்குத் தீ வைத்ததுடன், போலீசாருடன் மோதலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டக்காரர்களைக் கலைக்க போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதுடன், தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனங்களையும் பயன்படுத்தினர்.மிலன் மட்டுமின்றி போலோக்னா, பிரெஸ்சியா, பெர்கமோ, டூரின் உள்ளிட்ட நகரங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தச் சம்பவங்கள் தொடர்பாகப் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறைச் சம்பவங்களை இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி கண்டித்துள்ளார்.
இந்தச் சூழலில், இத்தாலியில் வசிக்கும் மற்றும் அங்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்தியத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளதுஇதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தலில், போராட்டங்கள் நடைபெறும் பகுதிகள் மற்றும் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், உள்ளூர் செய்திகளைத் தொடர்ந்து கவனித்து நிலைமையை அறிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அவசரநிலை ஏற்பட்டால் இந்தியத் தூதரகம் மற்றும் மிலனில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தைத் தொடர்புகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியத் தூதரகம், ரோம்: +39 331 614 2085
இந்தியத் துணைத் தூதரகம், மிலன்: +39 388 164 7527
இத்தாலியில் நிலவும் போராட்டச் சூழலைக் கருத்தில் கொண்டு, இந்தியர்கள் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி எச்சரிக்கையுடன் இருக்குமாறு தூதரகம் வலியுறுத்தியுள்ளது.