உலக செய்திகள்

உலக நன்மைக்கான சக்தியாக குவாட் கூட்டமைப்பு இயங்கும் - பிரதமர் மோடி

வாஷிங்டனில் நடைபெற்று வரும் குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

வாஷிங்டன்,

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு, வாஷிங்டனில் இன்று நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, அமெரிக்கா சென்றுள்ளார்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு அமெரிக்காவைச் சேர்ந்த 5 உயர் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை தனித்தனியாக சந்தித்து பேசினார். பின்னர் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்தார்.

இதனை தொடர்ந்து வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகைக்கு பிரதமர் மோடி சென்ற போது, அங்கு திரண்டிருந்த இந்திய வம்சாவளியினர் இந்திய கொடியை உயர்த்தி பிடித்தபடி அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர். பின்னர் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்த பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் பற்றி பேசினார்.

இதையடுத்து குவாட் உச்சி மாநாடு நடைபெறும் வெள்ளை மாளிகையின் கிழக்கு அறைக்கு ஜனாதிபதி ஜோ பைடன், பிரதமர் மோடி, பிரதமர் யோஷிஹிடே சுகா மற்றும் பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகிய நால்வரும் சென்றனர். இதனை தொடர்ந்து குவாட் உச்சி மாநாடு தொடங்கியது. அப்போது பிரதமர் மோடி பேசியதாவது;-

இந்த குவாட் உச்சி மாநாட்டில் நேரில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுத்த ஜோ பைடனுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2004 சுனாமிக்கு பிறகு இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கு உதவ முதல் முறையாக நான்கு நாடுகள் ஒன்றிணைந்தன. இன்று உலகம் கொரோனவுடன் போராடும்போது, குவாட் உறுப்பினர்களாகிய நாங்கள் மீண்டும் மனிதநேயத்தின் நலனுக்காக ஒன்றிணைந்து இருக்கிறோம். எங்கள் குவாட் தடுப்பூசி முயற்சி இந்தோ-பசிபிக் பிராந்திய மக்களுக்கு நிச்சயம் உதவும்.

பொதுவான ஜனநாயக மதிப்புகளின் அடிப்படையில், நேர்மறையான சிந்தனை மற்றும் அணுகுமுறையுடன் முன்னேற குவாட் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. விநியோகச் சங்கிலி அல்லது உலகளாவிய பாதுகாப்பு, காலநிலை நடவடிக்கை, கொரோனா தடுப்பு, தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பு ஆகியவை குறித்து குவாட் உறுப்பினர்களுடன் விவாதிப்பதில் நான் மகிழ்ச்சியடைவேன்.

உலக நன்மைக்கான சக்தியாக இந்த குவாட் கூட்டமைப்பு இயங்கும். குவாட்டில் எங்கள் ஒத்துழைப்பு இந்தோ-பசிபிக் மற்றும் முழு உலகிலும் அமைதியையும் செழிப்பையும் உறுதி செய்யும் என்று நான் நம்புகிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.