உலக செய்திகள்

இலங்கை புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்பு

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நேற்று பதவி ஏற்றார். 15 மந்திரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) பதவி ஏற்கிறார்கள்.

கொழும்பு,

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, அதன் காரணமாக ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம், போராட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்களால் இலங்கை தத்தளிக்கிறது.

9 பேர் சாவு

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத ராஜபக்சே சகோதரர்கள் அரசில் இருந்து வெளியேற வேண்டும் எனக்கோரி நடந்து வந்த போராட்டத்தின் காரணமாக கடந்த 9-ந்தேதி பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார்.

அத்துடன் நாடு முழுவதும் கலவரமும் வெடித்தது. மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் மற்றும் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் இடையே நிகழ்ந்த வன்முறையில் எம்.பி., போலீஸ்காரர்கள் உள்பட 9 பேர் பலியாகினர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2 நாட்கள் நீடித்த வன்முறை யில் ராஜபக்சேக்களின்பூர்வீக வீடு, பெற்றோரின் நினைவிடம், எம்.பி.க்கள்-மந்திரிகள் என அரசியல் தலைவர்களின் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. ஏராளமான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டன.

களமிறங்கிய ராணுவம்

இலங்கை வரலாற்றில் இல்லாத அளவுக்கு தலைவிரித்தாடிய இந்த கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தை களமிறக்கிய அதிபர் கோத்தபய ராஜபக்சே, வன்முறையாளர்களை கண்டதும் சுடவும் உத்தரவும் வழங்கினார். அத்துடன் நாடு முழுவதும் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது.

இந்த நடவடிக்கைகளால் வன்முறை சம்பவங்கள் ஓய்ந்து நாடு முழுவதும் அமைதி திரும்பியது. அங்கு நேற்று முன்தினம் முதல் வன்முறை சம்பவங்கள் நிகழாததால் நேற்று காலை 7 மணிக்கு ஊரடங்கு விலக்கப்பட்டது.

பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்று அதிகாலை 6 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு அமைக்க நடவடிக்கை

இலங்கையில் கடந்த 9-ந்தேதி முதல் பிரதமரோ, மந்திரிசபையோ இல்லாததால், நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் மோசமடையும் சூழல் ஏற்பட்டது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் அதிபருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

இதனால் புதிய பிரதமர் மற்றும் மந்திரிசபை அடங்கிய இடைக்கால அரசை நியமிக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே தீவிர நடவடிக்கை மேற்கொண்டார். இதற்காக பல்வேறு கட்சி தலைவர்களுடன் அவர் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதை நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையிலும் எடுத்துக்கூறினார். அதாவது இலங்கையில் இந்த வாரம் புதிய பிரதமரும், மந்திரிசபையும் நியமிக்கப்படும் எனவும், இதில் ராஜபக்சேக்கள் யாரும் இடம்பெறமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

பிரேமதாசா நிபந்தனை

பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயா (எஸ்.ஜே.பி.) தலைவர் சஜித் பிரேமதாசாவிடம் பிரதமர் பதவியை ஏற்பது தொடர்பாக கோத்தபய ராஜபக்சே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால் கோத்தபய ராஜபக்சே அதிபராக இருக்கும் வரை பிரதமர் பதவியை ஏற்கமாட்டேன் என அவர் அறிவித்தார்.

எனினும் அடுத்தடுத்து அவரிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து, அதிபருக்கு 4 நிபந்தனைகளை அவர் விதித்தார். இது தொடர்பாக அதிபருக்கு எஸ்.ஜே.பி. கட்சி நேற்று அனுப்பி வைத்தது.

இலங்கை அரசியல்சட்ட 19-வது திருத்தத்தை அனைத்துக்கட்சி ஆதரவுடன் 2 வாரங்களுக்குள் அமல்படுத்த வேண்டும், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும், 21-வது சட்ட திருத்தம் மூலம் அதிபரின் நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்வதற்கு அனைத்துக்கட்சிகளுடன் இணைந்து அதிபர் செயல்பட வேண்டும், அரசியல்சாசன சீர்திருத்தங்களை மேற்கொண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிபர் அழைப்பு விடுக்க வேண்டும் என்ற 4 நிபந்தனைகள் அதில் விதிக்கப்பட்டு இருந்தன.

இந்த நிபந்தனைகளை அதிபர் ஏற்றுக்கொண்டால் பிரதமர் பதவியை ஏற்பதாக சஜித் பிரேமதாசா கூறியிருந்தார்.

ஆனால் அதிபரின் நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என கோத்தபய ராஜபக்சே நேற்று தனது டுவிட்டரில் கூறியிருந்தார். எனினும் பதவி விலகுவது குறித்து அவர் எதையும் தெரிவிக்கவில்லை.

பிரதமரானார்ரணில் விக்ரமசிங்கே

இதற்கிடையே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கேயுடன் நேற்று முன்தினம் அதிபர் கோத்தபய ராஜபக்சே பேச்சுவார்த்தை நடத்தினார். மூடிய அறையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையின்போது, இலங்கை பிரதமர் பதவியை ஏற்குமாறு ரணில் விக்ரமசிங்கேவிடம் கோத்தபய ராஜபக்சே கேட்டுக்கொண்டார்.

அடுத்தடுத்து நடந்த இந்த பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து இலங்கை பிரதமர் பதவியை ஏற்க ரணில் விக்ரமசிங்கே ஒப்புக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நேற்று மாலையில் பதவியேற்றுக்கொண்டார். 15 உறுப்பினர்கள் அடங்கிய புதிய மந்திரிசபை இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்கிறது.

இலங்கையின் பிரபலமான தலைவர்களில் ஒருவரான ரணில் விக்ரமசிங்கே, ஏற்கனவே 4 முறை பிரதமராக பதவி வகித்து உள்ளார். கடந்த 2018-ல் இவர் பிரதமராக இருந்தபோது, அப்போதைய அதிபர் சிறிசேனா இவரை பதவி நீக்கம் செய்தார். எனினும் 2 மாதங்களுக்குப்பின் மீண்டும் விக்ரமசிங்கேவை அவர் பிரதமராக நியமித்தார்.

வெற்றி வாய்ப்பை இழந்தவர்

225 உறுப்பினர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற 113 உறுப்பினர்கள் ஆதரவு வேண்டும். ஆனால் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கேவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி. கட்சி எம்.பி.க் களில் ஒரு பிரிவினர் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

அதேநேரம் இலங்கையின் மிகவும் பழமையான கட்சியான ஐக்கிய தேசிய கட்சி, 2020-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஓரிடத்திலும் வெற்றி பெறவில்லை. கட்சியின்தலை வர் ரணில் விக்ரமசிங்கே உள்பட ஒரு உறுப்பினர் கூட வெற்றி வாய்ப்பை பெறவில்லை.

பின்னர் ஒட்டுமொத்த அளவில் அந்த கட்சி பெற்ற வாக்குகளின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட ஒரு இடத்தின் மூலம்தான் ரணில் விக்ரமசிங்கே, நாடாளுமன்றத்தில் எம்.பி.யாக நுழைய முடிந்தது.

இதன் மூலம் நாடாளுமன்றத்தில் ஒரேயொரு எம்.பி. பதவியை பெற்றுள்ள ஐக்கிய தேசிய கட்சி வசம் பிரதமர் பதவி சென்றுள்ளது.

நெருக்கடியில் இருந்து மீளுமா?

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசாவும், ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர் ஆவார். கட்சியின் துணைத்தலைவராக இருந்த அவர், பின்னர் கட்சியில் இருந்து விலகி எஸ்.ஜே.பி. கட்சியை நிறுவி தற்போது எதிர்க்கட்சி தலைவராக உயர்ந்துள்ளார்.

தொலைநோக்கு கொள்கை களுடன் பொருளாதாரத்தை நிர்வகிக்கக்கூடிய ஆற்றல் பெற்றவராக ரணில் விக்ரமசிங்கே பரவலாக அறியப்படுகிறார். சர்வதேச அளவிலும் ஆதரவு பெற்ற அவரால், இலங்கையின் அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காண முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது முந்தைய பதவிக்காலங்களில் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டவராக அறியப்படும் ரணில் விக்ரமசிங்கே, மீண்டும் பிரதமராக பதவியேற்றிருப்பதன் மூலம் அவர் மீதான நம்பிக்கையின் காரணமாக நாட்டில் போராட்டங்களும் முடிவுக்கு வரும் என கருதப்படுகிறது.

எனினும் அளவுக்கு அதிகமான கடன்கள், வரலாறு காணாத ரூபாய் மதிப்பு வீழ்ச்சி என கடும் நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையை ரணில் விக்ரமசிங்கேவால் மீட்க முடியுமா? என்பது வருகிற நாட்களில் தெரியவரும்.

இதற்கிடையே ரணில் விக்ரமசிங்கே கட்சிக்கு போதிய எம்.பி.க்கள் இல்லாததால் அவர் ராஜபக்சேவை நம்பியே ஆட்சியை நடத்த முடியும். இதை அந்நாட்டு மக்கள் எப்படி ஏற்பார்கள் என்பது போக போக தான் தெரியும்.