இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த 1960-ம் ஆண்டு சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளுக்கும் இடையே நதிநீர் பகிர்ந்து கொள்ளப்பட்டு வந்தது. இதற்கிடையே, கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் 22-ந்தேதி காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் மந்திரி முசாதிக் மசூத் மாலிக், தங்களுக்கான நீரை தடுக்க முயற்சிப்பவர்களின் கைகளை துண்டிப்போம் என்று மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உரையாடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்திருந்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், சிந்து நதிநீர் ஒப்பந்தம் குறித்து விவாதிக்க இந்தியா அழைப்பு விடுத்தால் நிச்சயமாக பேச்சுவார்த்தை நடத்துவோம். தற்போது இந்த விவகாரம் குறித்து பேசுவதற்கு இந்தியா எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. குறிப்பிட்ட இருதரப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்க இந்தியா முறையாக அழைப்பு விடுத்தால் அதில் பங்கேற்போம் என்றார்.
இதற்கிடையே, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததற்கு எதிராக ஏற்கனவே இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.ஆனால், அந்த கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காத முசாதிக் மசூத் மாலிக், இந்தியா இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கும்போது அந்த விவகாரங்கள் குறித்து பதிலளிப்பேன் என்று தெரிவித்தார்.மேலும், பயங்கரவாதம் தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆதாரங்களின் அடிப்படையில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே, சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் ஏற்கனவே தெரிவித்துள்ளார். இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டது. அதில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.