வாஷிங்டன்,
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்கா வும், சீனாவும் அதிகரித்து வரும் கடன் சுமையைச் சமாளிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளன. சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட சீனா தொடர்பான அறிக்கையில் இடம்பெற்றுள்ள 2025-ம் ஆண்டுக்கான மதிப்பீட்டின்படி, சீனாவின் அரசு, உள்ளாட்சி அமைப்புகள், குடும்பங்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட நிதி சாராத துறைகளின் மொத்தக் கடன் சுமார் 61.5 லட்சம் கோடி டாலராகும்.
இது அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 310 சதவீதமாகும். இந்திய மதிப்பில் சுமார் ரூ.5,843 லட்சம் கோடியாகிறது. அதேபோல், அமெரிக்காவின் அரசுக் கடனும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்க அரசின் கருவூலத் தரவுகளின்படி, 2026 அக்டோபர் 8-ந்தேதி நிலவரப்படி அந்நாட்டின் மொத்த அரசுக் கடன் சுமார் 40.31 லட்சம் கோடி டாலராக இருந்தது.
இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.3,829 லட்சம் கோடியாகும். அமெரிக்காவும், சீனாவும் உலக வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த வல்லரசு நாடுகளில் கடன் சுமை அதிகரிப்பது, நிதிச் சந்தைகள், முதலீடுகள், வட்டி செலவுகள் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.