உலக செய்திகள்

பாகிஸ்தானில் சாலை விபத்து; 11 பேர் பலி

சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி மரியம் நவாஸ், இரங்கல் தெரிவித்து கொண்டார்.

லாகூர்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இன்று நடந்த சாலை விபத்தில் சிக்கி 11 பேர் பலியானார்கள்.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து, பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தேரா காசி கான் மாவட்டத்திற்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, லாகூரிலிருந்து சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராஜன்பூர் அருகே பஸ் வந்தபோது, சாலை பிரிப்பானில் மோதி விபத்தில் சிக்கியது.

11 பேர் பலி

இதில், சிக்கி பஸ்சில் பயணித்த 11 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்து நடந்த பகுதியில், நெடுஞ்சாலையில் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்தன.

அப்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பஸ் விரைவாக சென்றதே விபத்திற்கு காரணம் என்று நம்பப்படுவதாக செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறினார். 3 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதல்-மந்திரி இரங்கல்

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி மரியம் நவாஸ், இரங்கல் தெரிவித்து கொண்டதுடன், காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சையை உறுதி செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவும் இட்டார்.

SCROLL FOR NEXT