பெய்ஜிங்,
விண்வெளிப் பயணங்களுக்கான செலவைக் குறைக்கும் நோக்கில், வெளிப்புறத்தில் ப்ளைவுட் மரத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட ராக்கெட் மூக்கு கூம்பை சீனாவின் தனியார் விண்வெளி நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது.
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு 'லைட் இயர் எக்ஸ்ப்ளோரர்' என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் வெளிப்புறத்தில் ப்ளைவுட் மரத்தைக் கொண்டு ராக்கெட் மூக்கு கூம்பை வடிவமைத்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நிறுவனம் கடந்த 2-ம் தேதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டது.
வழக்கமாக அலுமினியம் அல்லது விலையுயர்ந்த கலப்புப் பொருட்களால் செய்யப்படும் இந்த பாகத்திற்குப் பதிலாக, 4.2 மீட்டர் விட்டம் கொண்ட இந்த புதிய கூம்பின் வெளிப்புறம் குறைந்த அடர்த்தி கொண்ட ப்ளைவுட் பலகைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. எடையைத் தாங்கும் வகையில் இதன் உள் பகுதியில் உறுதியான உலோகச் சட்டகம் பொருத்தப்பட்டுள்ளது.
எடை குறைப்பு, உறுதித்தன்மை, சத்தத்தைக் கட்டுப்படுத்தும் திறன் மற்றும் ரேடியோ அலைகளை ஊடுருவ விடும் தன்மை ஆகியவற்றில் இது வழக்கமான கூட்டுப் பொருட்களுக்கு இணையான செயல்திறனைக் கொண்டுள்ளது. ஒரே நேரத்தில் பல செயற்கைக்கோள்களை ஏவும் திட்டங்களுக்கும், பெரிய செயற்கைக்கோள்களை அடிக்கடி விண்ணில் செலுத்துவதற்கும் இது மிகவும் ஏற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய முறையால் ராக்கெட் பாகங்களைத் தயாரிப்பதற்கான செலவும் கால அளவும் கணிசமாகக் குறையும். மேலும், ராக்கெட் வளிமண்டலத்தை விட்டு வெளியேறிய பின் இந்தப் பாகம் பிரிந்து பூமிக்குத் திரும்பும்போது, உலோகங்களைப் போல விண்வெளிக் குப்பைகளை உருவாக்காமல் வளிமண்டல உராய்வில் முழுமையாக எரிந்து சாம்பலாகும் தன்மை கொண்டது.
தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய வடிவமைப்பு, வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு பல்வேறு கட்டத் தரச் சோதனைகள் மற்றும் சரிபார்ப்பு நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளது.