முதியவர் ரூ- வங்கிக்கணக்கு 
உலக செய்திகள்

முதியவரின் வங்கிக் கணக்கில் ரூ.56 லட்சம் ஓய்வூதியப் பணம்: 21 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிப்பு

"என் வாழ்நாளில் இவ்வளவு பெரிய தொகையை நான் பார்த்ததே இல்லை. எனக்கு உதவி செய்த அரசு அதிகாரிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்" என்று ரூ நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

பெய்ஜிங்,

சீனாவில் வறுமையின் காரணமாக கடந்த 21 ஆண்டுகளாக குப்பை பொறுக்கி வந்த 71 வயது முதியவர் ஒருவருக்கு, அவரது வங்கிக் கணக்கிலேயே ரூ.56 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியப் பணம் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. தனக்கு ஓய்வூதியம் வரும் விஷயம் தெரியாமலேயே அவர் இவ்வளவு காலம் வாழ்ந்து வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரிகள் கொடுத்த இன்ப அதிர்ச்சி

சீனாவின் ஹுனான் மாகாணத்தைச் சேர்ந்த முதியவர் 'ரூ' (வயது 71). இவர் மிகவும் ஏழ்மையான நிலையில் குப்பை பொறுக்கும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாத இறுதியில், அவரது நிலையை அறிந்த உள்ளூர் சமூக உதவித் துறை அதிகாரிகள், அவரது ஓய்வூதியக் கணக்கை சரிபார்த்தனர். அப்போது, கடந்த 21 ஆண்டுகளாக அவருக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியத் தொகை முழுவதும் அவரது வங்கிக் கணக்கிலேயே பாதுகாப்பாக சேர்ந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கண்ணீரில் நனைந்த முதியவர்

இதையடுத்து, அதிகாரிகள் முதியவர் ரூ-வை நேரில் சந்தித்து, அவரது கணக்கில் 4,24,204 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.56 லட்சத்திற்கும் மேல்) பணம் இருக்கும் புதிய வங்கி அட்டையை அவரிடம் ஒப்படைத்தனர். வங்கிக் கணக்கில் இவ்வளவு பெரிய தொகை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த முதியவர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், "என் வாழ்நாளில் இவ்வளவு பெரிய தொகையை நான் பார்த்ததே இல்லை. எனக்கு உதவி செய்த அரசு அதிகாரிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இத்தனை ஆண்டுகள் வறுமையில் வாடிய முதியவருக்கு, அவரது முதுமைக் காலத்தில் கிடைத்துள்ள இந்த 'புதையல்' போன்ற பணம், சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

SCROLL FOR NEXT