உலக செய்திகள்

உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது ரஷியா நள்ளிரவில் கடும் தாக்குதல்

உக்ரைனின் எரிசக்தி துறை மற்றும் கீவ் உட்பட பல பகுதிகளில் மின் தடையும் ஏற்பட்டது.

கீவ்

உக்ரைன் நாடு மீது ரஷியா தொடுத்துள்ள போரானது, நாளையுடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. இந்த போரால் உக்ரைனில் வீரர்களில் பலர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்து சென்று விட்டனர். இந்நிலையில், உக்ரைனில் இருந்து 1,400 கி.மீ. தொலைவில் உள்ள ரஷியாவின் உத்மூர்த் பகுதியில் அமைந்த ஏவுகணை தயாரிப்பு தொழிற்சாலையை டிரோன்கள் கொண்டு உக்ரைன் படை நேற்று தாக்கியது.

இதனை ரஷியாவும் உறுதி செய்தது. இதற்கு பதிலடியாக உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது ரஷியா நள்ளிரவில் கடும் தாக்குதலை தொடுத்துள்ளது. உக்ரைனின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறும்போது, போலந்து எல்லையை ஒட்டிய பகுதியருகே உக்ரைனின் வீவ் நகரில் ரஷியா நடத்திய கடும் தாக்குதலில் 23 வயது பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் பலியானார்.

இதுதவிர 24 பேர் காயம் அடைந்தனர் என கூறினார். இதனை பயங்கரவாத செயல் என வீவ் நகர மேயர் ஆண்ட்ரி சடோவி கூறியுள்ளார். இதேபோன்று, ரஷிய படைகள் கீவ் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளையும் நள்ளிரவில் தாக்கியது.

இந்த தாக்குதல்களில் நிப்ரோ, கிரோவோராத், மிகோலைவ், பொல்டாவா மற்றும் சுமி பகுதிகள் இலக்காக கொள்ளப்பட்டன. எரிசக்தி துறையை தவிர, குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் ரெயில்வே பகுதிகளும் பலத்த சேதமடைந்தன என ஜெலன்ஸ்கி குறிப்பிட்டார்.

இதனால், உக்ரைனின் எரிசக்தி துறை மற்றும் கீவ் உட்பட பல பகுதிகளில் மின் தடையும் ஏற்பட்டது. 4 குழந்தைகள் உட்பட 17 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல்களால் 5 மாவட்டங்களில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. இதனை கவர்னர் மைக்கோலா கலாஷ்னிக் தெரிவித்து உள்ளார்.