உலக செய்திகள்

ரஷியா-உக்ரைன் போர்: அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது - டொனால்டு டிரம்ப்

இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

ரஷியா-உக்ரைன் போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பேச்சுவார்த்தை மூலம் போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ஆனாலும், இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

இந்த நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ல பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

ரஷியா தொடர்பான எனது முடிவு மிகவும் எளிமையானது. ரஷியா-உக்ரைன் இடையிலான போரில் அமைதியை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் நான் ஈடுபட்டுள்ளேன். எனவே, பேச்சுவார்த்தை மேசையிலிருந்து ரஷியாவை முட்டாள்தனமாக விலகச் செய்யும் எந்தவொரு செயலையும் நான் விரும்பவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இதில் தற்போது நடைபெற்று வரும் பிணைக் கைதிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளும் அடங்கும்!

இந்த நேரத்தில் அந்த ஆவணத்தில் கையெழுத்திடுவது, ரஷியாவை பேச்சுவார்த்தையிலிருந்து விலகச் செய்யும். அந்த ஆவணத்தில் நான் பின்னர் கையெழுத்திடலாம் அல்லது நான் விரும்பும் எந்த நேரத்திலும் கையெழுத்திடலாம்!

ஜெலென்ஸ்கி அறிந்தே இதைச் செய்கிறார்

ஒருவேளை, இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால், ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கு ரஷியா மிகக் குறைந்த அளவிலேயே உதவி செய்து வருகிறது. சொல்லப்போனால், அது வழங்கக்கூடிய உதவியுடன் ஒப்பிடும்போது, எந்த உதவியும் செய்யவில்லை என்றே கூறலாம். இந்த நிலை அப்படியே தொடர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். முட்டாள்கள் குறுக்கிடாத வரை, அது அப்படியே தொடரும்!

கடைசியாக, ரஷியாவில் உள்ள டீசல் சுத்திகரிப்பு நிலையங்களை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறார். இந்தத் தாக்குதல்கள் உலகளாவிய டீசல் சந்தையை, அமெரிக்காவில் உள்ள சந்தையையும் சேர்த்து, கடுமையாகப் பாதிக்கின்றன என்பதை அவர் அறிந்தே இதைச் செய்கிறார்.

விவசாயிகள், கால்நடைப் பண்ணையாளர்கள் மற்றும் அனைத்து வகையான தொழில் நிறுவனங்களும் இதனால் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. இருப்பினும், ரஷியா உலக நாடுகளுக்கு குறைந்த விலையில் மில்லியன் கணக்கான பீப்பாய் டீசலை அனுப்பி வருகிறது.

போர் முடிவுக்கு வர வேண்டும்

ஜெலென்ஸ்கி இதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. வெளிப்படையாகச் சொல்வதானால், ஐரோப்பா அவருக்கு பெருமளவில் வழங்கி வரும் பணத்தையும், கடந்த காலத்தில் நேர்மையற்ற ஜோ பைடன் அவருக்கு வழங்கிய பணத்தையும் வைத்துப் பார்க்கும்போது, இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அவர் விரும்பவில்லை. உண்மையில், அவர் ஒருபோதும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்பியிருக்க மாட்டார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இப்போது கிடைக்கக்கூடிய ஒப்பந்தத்தைவிடச் சிறந்த ஒப்பந்தத்தை அவர் செய்திருக்க முடியும். அவரது நாடு சீர்குலைந்துள்ளது. நாட்டின் பெரும் பகுதி நிலப்பரப்பை அவர் இழந்துவிட்டார். அவரது கடல் பகுதிகளும் கடல் எல்லைகளும் இல்லாமல் போய்விட்டன. அவரது நாட்டின் ஆண் மக்கள் தொகையும் குறைந்துவிட்டது; பலர் காயமடைந்துள்ளனர் அல்லது உயிரிழந்துள்ளனர்.

இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT