நியூயார்க்,
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் மொத்தம் 15 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இது தவிர 10 நாடுகள் 2 ஆண்டு காலத்திற்கு தற்காலிக உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஐ.நா.வில் நிரந்தர உறுப்பினராக இருக்கும் நாடுகளுக்கு மட்டுமே வீட்டோ(Veto) அதிகாரம் உள்ளது.
இந்நிலையில், ஐ.நா. சபையில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக இணைக்க வேண்டும் என ரஷியா வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்தியா தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்தியாவை ஐ.நா. நிரந்தர உறுப்பினராக இணைக்க சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்தியாவின் நெருங்கிய கூட்டாளியாக திகழும் ரஷியா இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நியூயார்க் நகரில் நடைபெற்ற 81-வது ஐ.நா. கூட்டத்தொடரில் ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்கெய் லாவ்ரோவ் பேசியதாவது;-
“ஐக்கிய நாடுகள் சபையில் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவின் பிரதிநிதித்துவத்தை விரிவுபடுத்துவதை ரஷியா ஆதரிக்கிறது. நிரந்தர இடத்திற்கான பிரேசில் மற்றும் இந்தியாவின் கோரிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம். அதே வேளையில், ஆப்பிரிக்க கண்டத்தின் நலன்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.
ஐ.நா. சபையின் சீர்திருத்த நடவடிக்கைகளில், மேற்கத்திய நாடுகளுக்கு, குறிப்பாக ராணுவவாதம் மற்றும் பழிவாங்கும் மனப்பான்மையை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெறக்கூடாது என்பதுதான் எங்களின் கொள்கை ரீதியான நிலைப்பாடு.
அனைவரையும் ஒருங்கிணைக்கும் நோக்கம் கொண்ட திட்டங்கள் மற்றும் உறுதியான செயல்வடிவங்களை ரஷியா முன்னெடுத்து வருகிறது. இன்று, சர்வதேச தகவல் பாதுகாப்பு குறித்த விவகாரம் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இத்தகைய விவாதங்களில், குறுகிய நோக்கம் கொண்ட பிற அமைப்புகள் அல்லாமல், ஐக்கிய நாடுகள் சபையே முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.