மாஸ்கோ,
ரஷியாவில் அணு ஆயுத வல்லமை பெற்ற குண்டு வீச்சு விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 வீரர்கள் உயிரிழந்தனர்.
ரஷியாவின் அமூர் மாகாணம் சீன எல்லையில் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் இன்று ரஷிய போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன.
அப்போது, ரஷிய விமானப்படைக்கு சொந்தமான டியூ-95 என்ற அணு ஆயுத வல்லமை பெற்ற குண்டு வீச்சு விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விமானம் வெடித்து சிதறியது. இதில் விமானத்தில் பயணித்த 6 வீரர்கள் உயிரிழந்தனர். ஒரே ஒரு வீரர் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.
இதையடுத்து, அந்த வீரர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். குண்டு வீச்சு போர் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.