சியோல்,
தென்கொரியாவிவில் 40 ஆயிரம் சாம்சங் நிறுவன ஊழியர்கள் ஊதிய உயர்வு, போனஸ் கேட்டு 18 நாள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியால் சாம்சங் நிறுவனம் தற்போது இமாலய லாபத்தை அள்ளி வருகிறது. குறிப்பாக, கடந்த மார்ச் வரையிலான காலாண்டில் மட்டும் சுமார் ரூ.3.2 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த பெரும் லாபத்துக்கு உழைத்த தங்களுக்கு உரிய போனஸ் வழங்கப்படவில்லை என்பதே ஊழியர்களின் முக்கியக் குற்றச்சாட்டாகும். "போனஸ் வழங்குவதில் வெளிப்படைத்தன்மை வேண்டும்! உச்சவரம்பை நீக்கு!" என வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சாம்சங்கின் போட்டி நிறுவனமான எஸ்.கே. ஹைனிக்ஸ், தனது ஊழியர்களுக்கு வாரி வழங்கிய போனஸ் தான் தற்போது சாம்சங் ஊழியர்களிடையே தீயாகப் பரவியுள்ளது. சாம்சங்கில் அடிப்படை ஊதியம் வாங்கும் ஒருவருக்கு கிடைக்கும் போனஸை விட, அதே அளவு ஊதியம் பெறும் எஸ்.கே. ஹைனிக்ஸ் ஊழியருக்கு 3 மடங்கு கூடுதல் போனஸ் கிடைக்கிறது என ஊழியர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
தற்போது 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொழிற்சங்கத்தில் பலமாக இணைந்துள்ளதால் சாம்சங் நிர்வாகம் கடும் நெருக்கடியில் உள்ளது. அடிப்படை ஊதியத்தில் 7 சதவீத உயர்வு மற்றும் லாபத்தில் 15 சதவீதத்தை போனஸாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிர்வாகம் ஏற்க மறுத்து வருகிறது.
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், வரும் மே 21-ந்தேதி முதல் தொடர்ந்து 18 நாட்களுக்குப் பிரம்மாண்ட வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகத் தொழிற்சங்கத் தலைவர் சோய் சியுங்-ஹோ எச்சரித்துள்ளார். ஒருநாள் வேலைநிறுத்தம் நடந்தால் கூட நிறுவனத்திற்கு சுமார் ரூ.5 ஆயிரத்து 600 கோடி இழப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
இந்த வேலைநிறுத்தம் நடந்தால், உலகம் முழுவதும் செல்போன் மற்றும் கணினிகளுக்குத் தேவையான சிப் தயாரிப்பு முற்றிலும் பாதிக்கப்படும். இதனால் சிப்களின் விலை உயர்ந்து, மற்ற மின்னணு சாதனங்களின் விலையும் அதிகரிக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தால் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும் என்பதால், சமரசப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது.