உலக செய்திகள்

சவுதி அரேபியா: மத வழிபாட்டு தலத்தில் பாலியல் செயலில் ஈடுபட்டதாக வங்காளதேசத்தினர் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு சவுதி அரேபியா.

ரியாத்,

சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மெக்காவில் பாலியல் செயல் ஈடுபட்டதாக வங்காளதேசத்தினர் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு சவுதி அரேபியா. இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் இஸ்லாமிய சட்டமான ஷரியத் சட்டம் நடைமுறையில் உள்ளது. சவுதி அரேபியாவில் இஸ்லாமிய மதத்தினரின் புனித வழிபாட்டு தலங்களான மெக்கா, மதீனா உள்ளன. இந்த வழிபாட்டு தலங்களுக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான இஸ்லாமிய மதத்தினர் யாத்திரை செல்கின்றனர்.

இதனிடையே, வங்காளதேசத்தை சேர்ந்த நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பஷீர் என்ற ஆணும், சிதி அக்தர் என்ற பெண்ணும் சவுதி அரேபியாவுக்கு யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இருவரும் மெக்காவில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டு தலமான மசூதியில் பாலியல் செயலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டனர். இதையடுத்து இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர், கைது செய்யப்பட்ட இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மரண தண்டனை நிறைவேற்றம்

இந்நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து ஷரியத் சட்டப்படி இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுவதாக கோர்ட்டு உத்தவிட்டது. இதனை தொடர்ந்து நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பஷீர் மற்றும் சிதி அக்தர் ஆகிய இருவருக்கும் நேற்று முன் தினம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

அதேவேளை, மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இருவரும் கணவன், மனைவியா? சம்பவம் நடந்த இடம் எது? சம்பவத்திற்கான ஆதாரங்கள் உள்பட எந்த விவரங்களையும் சவுதி அரேபியா வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றுவதற்குமுன் இது குறித்து வங்காளதேச அரசுக்கு சவுதி அரேபியா எந்த தகவலையும் அளிக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

SCROLL FOR NEXT