இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானுக்கு வழங்கிய 3 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.25 ஆயிரம் கோடி) நிதியுதவி திட்டத்தை சவுதி அரேபியா மேலும் சில காலம் நீட்டித்துள்ளது என்று பாகிஸ்தான் நிதி மந்திரி முகமது அவுரங்கசீப் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: நிதியுதவிக்கான கால அவகாசம் நியாயமான காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வலுவான உறவை கருத்தில் கொண்டு, எவ்வளவு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து கவலைப்படத் தேவையில்லை" என்றார்.
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு திருப்பிச் செலுத்திய 3.5 பில்லியன் டாலர் கடனுக்கு மாற்றாக, கடந்த ஏப்ரல் மாதம் சவுதி அரேபியா 3 பில்லியன் டாலர் நிதியுதவியை வழங்கியிருந்தது. முதலில் இந்த நிதியுதவி 3 மாத காலத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. அதன் கால அவகாசம் கடந்த 31-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பாகிஸ்தானின் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க சவுதி அரேபியா மேலும் 5 பில்லியன் டாலர் நிதியுதவியும் வழங்கியுள்ளது. இதற்கான கால அவகாசம் 2028-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நிதி மந்திரி அவுரங்கசீப் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், பாகிஸ்தானின் அன்னியச் செலாவணி கையிருப்பு 3 மாதங்களுக்கும் அதிகமான இறக்குமதிச் செலவுகளைச் சமாளிக்கும் அளவில் இருப்பதாக முகமது அவுரங்கசீப் கூறினார். இந்த ஆண்டின் இறுதிக்குள் அதனை 4 மாத இறக்குமதிச் செலவுகளைச் சமாளிக்கும் அளவுக்கு உயர்த்த திட்டமிட்டுள்ளது.இதனால், கூடுதல் நிதியுதவி எதையும் சவுதி அரேபியாவிடம் கோரவில்லை” என்றார்.
அமெரிக்காவிடம் கடந்த ஜூலை மாதம் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதி வசதியை பாகிஸ்தான் கோரியிருந்தது. இதுகுறித்து பேசிய நிதி மந்திரி, சர்வதேச சந்தைகளில் நிதி திரட்டுவதற்கான வாய்ப்பையே முதன்மையாக எதிர்பார்த்தோம். இதன் ஒரு பகுதியாக, கடந்த செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன் பத்திரங்களை வெளியிட்டது. இதற்கு 6 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டு ஆர்டர்கள் கிடைத்தது. அமெரிக்காவின் நிதியுதவி கிடைத்தால் வரவேற்பதாகவும், இல்லாவிட்டாலும் யூரோ பாண்டுகள் உள்ளிட்ட மாற்று வழிகளில் நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் கடுமையான நிதி நெருக்கடியில் தவித்து வருவதால் அதில் இருந்து மீள பல்வேறு நாடுகளிடமும் உதவி கேட்டு வருகிறது.