சனா,
ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனிடையே, ஏமனின் சில பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதம் உள்பட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.
அதேவேளை, அமெரிக்கா, ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் துறைமுகங்களை முடக்குவோம் என்று மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஏமன் மீது சவுதி அரேபியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஹுடாடே துறைமுக நகரம் மீது சவுதி வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆயுதக்கிடங்குகள், கட்டுப்பாட்டு மையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.