மாஸ்கோ,
வடகிழக்கு சைபீரியாவில் உள்ள அலாசியா ஆற்றின் கரையில், ஒரு நுண்ணிய புழுவின் உறைந்த படிமத்தை ரஷிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். ‘யெடோமா’(Yedoma) எனப்படும் நிரந்தர பனிப்படலம், அந்த புழுவை சுமார் -20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் திடமாக உறைந்த நிலையில் வைத்திருந்தது.
ஆய்வாளர்கள் அதை ஆய்வகத்திற்கு எடுத்துச் சென்று, அந்த புழுவை சுற்றியிருந்த பனிப்படலத்தை உருக்கினர். அப்போது அந்த புழு மீண்டும் உயிர்ப்பித்து எழுந்தது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து அது நகரவும், உணவு உட்கொள்ளவும் ஆரம்பித்தது.
ஆனால், அதன் பிறகு மற்றொரு ஆச்சரியம் நிகழ்ந்தது. அந்த புழு துணை இல்லாமல் இனப்பெருக்கம்(Asexual Repriduction) செய்யத் தொடங்கியது. மேலும், குட்டிப் புழுக்களும் அதன் தாயைப் போலவே எந்தவித குறைபாடுகளும் இல்லாத உடல் அமைப்பைக் கொண்டிருந்தன. இது விஞ்ஞான உலகில் இதுவரை கண்டிராத அரிய கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது.
ரேடியோ கார்பன் முறைப்படி ஆய்வு செய்ததில், இந்த புழு சுமார் 23 முதல் 24 ஆயிரம் ஆண்டுகள் வரை உறைந்த நிலையில் இருந்திருக்கலாம் என தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சில உயிரினங்கள் பொதுவாக குளிர்காலத்தை சமாளிக்க ‘கிரிப்டோபயாசிஸ்’ (Cryptobiosis) என்ற நிலைக்குச் செல்கின்றன.
அந்த சமயத்தில், அந்த உயிரினங்களின் உடல் செயல்பாடுகள் கிட்டத்தட்ட நின்று போய்விடும். ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பனியில் உறைந்திருந்தாலும், ஒரு உயிரினம் மீண்டும் உயிர்ப்பித்து எழுந்து இனப்பெருக்கம் செய்ய முடியும் என்பதற்கு முதன் முறையாக பதிவு செய்யப்பட்ட ஆதாரம் கிடைத்துள்ளது என ரஷிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை ‘ஸாம்பி’ புழு என்று சிலர் அழைத்தாலும், அறிவியல் ரீதியாக இந்த புழு உயிரிழக்கவில்லை என்றும், அதன் உடலியல் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.