உலக செய்திகள்

ஈரான் மீது இன்று இரவு கடுமையான தாக்குதல் நடத்தப்படும்: டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில நாட்களாக பரஸ்பர தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், டிரம்பின் இந்த புதிய எச்சரிக்கை மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

டெஹ்ரான்,

வளைகுடா பிராந்தியத்தில் ஈரான்-அமெரிக்கா இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. அதேநேரம் இரு தரப்பும் அவ்வப்போது தாக்குதலிலும் ஈடுபட்டு வருகின்றன.   அத்துடன் ஈரானும், இஸ்ரேலும் மீண்டும் பரஸ்பர தாக்குதலை நடத்தியதால் வளைகுடா பிராந்தியத்தில் நிரந்தர அமைதி ஏற்படுவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.   இந்த பரபரப்புக்கு இடையே அமெரிக்காவின் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர் ஒன்று நேற்று முன்தினம் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஹார்முஸ் நீரிணையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அந்த ஹெலிகாப்டர் ஈரானின் டிரோன் தாக்குதலில் சிக்கி விழுந்தது.   எனினும் அதில் இருந்த 2 விமானிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பின்னர் அறிவித்தார்.  

அமெரிக்கா தாக்குதல்

வளைகுடா போர் மற்றும் ஈரான் கடற்பகுதி முற்றுகையில் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. எனவே அதை சுட்டு வீழ்த்தியது அமெரிக்காவுக்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.   இதைத்தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா வான்தாக்குதலை தொடுத்தது. குறிப்பாக அந்த நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பு, தரைத்தள கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் ரேடார் நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டன.   பந்தர் அப்பாஸ் மற்றும் காசிம் தீவுகளில் இந்த தாக்குதல் நடந்ததாக ஈரானும் அறிவித்தது. எனினும் இதில் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.   அமெரிக்காவின் இந்த அதிரடியை தொடர்ந்து ஈரான் பதிலடி தாக்குதலை தொடங்கியது.  

கடும் தாக்குதல்

இதனால் மத்தியகிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இன்று இரவு அமெரிக்கா மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக டிரம்ப் தனது ட்ரூத் வலைத்தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: “ஈரானின் கடற்படை, விமானப்படை, ரேடார், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பெரும்பாலான தாக்குதல் திறன்கள் அழிக்கப்பட்டுவிட்டன. அமெரிக்கா இன்று இரவு ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதலை நடத்தும். ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு மற்றும் பிற எண்ணெய் உள்கட்டமைப்பு பகுதிகளை அமெரிக்கா எதிர்காலத்தில் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும” என்று பதிவிட்டுள்ளார்.

கார்க் தீவு

ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் பெரும்பகுதி கார்க் தீவு வழியாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. வெனிசுலாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைகளில் அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகளைப் போலவே, ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைகளையும் முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கம் இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில நாட்களாக பரஸ்பர தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், டிரம்பின் இந்த புதிய எச்சரிக்கை மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.