உலக செய்திகள்

ஜப்பானை புரட்டிப்போட்ட ‘ஜாங்மி’புயல்.. 900 விமானசேவைகள் ரத்து

‘ஜாங்மி’ புயல் காரணமாக புல்லட் ரெயில் சேவைகள், சாலை போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து பொது போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டன.

டோக்கியோ,

ஜாங்மி புயல்

‘ஜாங்மி' என்னும் தீவிர வெப்பமண்டல புயல் ஜப்பானை மிகக் கொடூரமாகத் தாக்கி வந்தது. முன்னதாக 'டைபூன்' என வகைப்படுத்தப்பட்டு, பின்னர் புயலாகக் குறைக்கப்பட்டநிலையில் தலைநகரமான டோக்கியோ உள்ளிட்ட ஜப்பானின் மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் கடற்கரைப் பகுதிகளை தாக்கியது.

கனமழை

இதனால் அப்பகுதியில் இடி, மின்னலுடன் கடுமையான மழை பெய்தது. மேலும் பலத்த காற்று வீசி அந்த நாட்டின் முக்கிய நகரங்களை உலுக்கி வருகிறது. உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 5 மணியளவில் வக்கா யாமா மாகாணத்தில் மணிக்கு 126 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்து பின்னர் உள்நாட்டுக்குள் நகர்ந்து வலுவிழந்தது.

பேய்மழை

டோக்கியோ, ஓவாசே, குஷிமோட்டோ உள்ளிட்ட ஆறுகளில் நகரில் பெய்த பேய்மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. ஓவாசே பகுதியில் அதிகமாக நேற்று ஒரே நாளில் 55 செ.மீ அளவில் கனமழை கொட்டி தீர்த்தது. முன்னதாக ஆற்றங்கரைகளில் வசித்து வந்த 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த பேய்மழை மற்றும் பலத்த காற்று காரணமாக மின்சார கோபுரங்கள், மின்கம்பங்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. டிரான்ஸ்பார்மர்களுக்குள் மழைநீர் புகுந்ததால் வெடித்து கருகின. இதனால் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கின.

விமான சேவைகள் ரத்து

புயல் பாதிப்பு காரணமாக வெளிநாடுகள் மற்றும் உள்ளூருக்குள் இயக்க விருந்த விமான சேவைகள் உள்பட 900 விமானங்கள் நேற்று ரத்து செய யப்பட்டன. மேலும் புல்லட் ரெயில் சேவைகள், சாலை போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து பொது போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டன.

புயல் ஏற்படுத்திய பாதிப்பால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. புயல் மற்றும் கனமழை காரணமாக 2 பேர் உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டோர் படு காயம் அடைந்தனர். ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.