உலக செய்திகள்

டிரம்புடன் கைகுலுக்கி விட்டு... ஈரானுக்கு 6 தரை வழிகளை திறந்து விட்ட பாகிஸ்தான் பிரதமர்

பாகிஸ்தானை நம்ப வேண்டாம் என்று அமெரிக்காவிடம், இஸ்ரேல் தொடர்ந்து கூறி வந்தது.

வாஷிங்டன்

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது.

எனினும் ஈரான், அமெரிக்கா இடையே நிரந்தர போர் நிறுத்தத்திற்காக பாகிஸ்தானில் 21 மணிநேரம் நீடித்த தொடக்க கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது என அமெரிக்கா தெரிவித்தது.

இதனை தொடர்ந்து, ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடுவதுடன், நீடித்த பொருளாதார நெருக்கடி நீடிக்கும் என அமெரிக்கா தெரிவித்தது. இதனால், மேற்காசிய பகுதியில் மீண்டும் பதற்றம் கூடியது.

ஈரான் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அப்படியில்லாமல் அதிருப்தி ஏற்படும் வகையிலான வழியை தேர்ந்தெடுக்கும் என்றால், அவர்களை முற்றுகையிடுவதுடன், உள்கட்டமைப்பு, மின்சாரம் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீது குண்டுகள் வீசி தாக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிப்பும் வெளியிட்டார்.

எனினும், ஹார்மூஸ் ஜலசந்தியில் ஈரான் முன்பே வரையறுத்துள்ள வழியின் மூலம் கப்பல் போக்குவரத்து நடைபெறும் என்றும் ஈரானின் துறைமுகங்களை முடக்கும் அமெரிக்காவின் நடவடிக்கை தொடர்ந்து நீடிக்கும் என்றால், அதற்கு பதிலடி நடவடிக்கைகளை எடுக்போம் என ஈரான் எச்சரித்தது.

ஹார்மூஸ் ஜலசந்தியின் பாதுகாவலர் நாங்களே என்றும் அதனை கடந்து செல்லும் அனைத்து கப்பல்களும் தங்களுடைய முன் அனுமதியை பெற வேண்டும் என்றும், நாடுகளின் கப்பல்கள் அங்கீகரிக்கப்பட்ட ஈரானிய வழிகளிலேயே செல்ல அனுமதிக்கப்படும் என்றும் ராணுவ கப்பல்களுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்படும் என்றும் ஈரான் தெரிவித்தது.

ஹார்மூஸ் ஜலசந்தியின் புதிய ஒழுங்கு முறைகளை ஏற்று, பாதுகாப்பு சேவைகளுக்கான கட்டணம் செலுத்த கூடிய கப்பல்களுக்கு முன்னுரிமை கொடுக்க ஈரான் முடிவு செய்துள்ளது. இதன்படி, ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்து செல்ல கட்டணம் செலுத்த ஒப்பு கொள்ளும் கப்பல்களை முதலில் கடந்து செல்வதற்கு ஈரான் அனுமதி அளிக்கும்.

அப்படி கட்டணம் செலுத்த மறுக்கும் கப்பல்கள் கடந்து செல்வது தள்ளிவைக்கப்பட்டு, அனுமதி அளிப்பது பின்னர் பரிசீலிக்கப்படும் என தகவல் வெளியானது. எனினும், ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டு உள்ளது. இதனால், ஈரானின் ஆயிரக்கணக்கான கன்டெய்னர்கள் இலக்கை அடைய முடியாமல் தேங்கியுள்ளன.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை தலைமையேற்று நடத்தும் முக்கிய நாடாக பாகிஸ்தான் உள்ள சூழலில், அது இரட்டை நிலைப்பாட்டை எடுத்துள்ள தகவல் வெளிவந்துள்ளது. இதன்படி, ஈரானுக்கு 6 தரை வழிகளை பாகிஸ்தான் திறந்து விட்டுள்ளது. இவற்றின் உதவியுடன், ரஷியா, சீனா மற்றும் பிற நாடுகளுடன் ஈரான் வர்த்தகம் செய்வது எளிமையாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதனையறிந்த அமெரிக்கா ஆத்திரமடைந்து உள்ளது. இதுபற்றி அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிபுணரான தெரிக் ஜே. கிராஸ்மேன் கூறும்போது, இந்த தரை வழிகளை பயன்படுத்தி கொள்ள ஈரானுக்கு பாகிஸ்தான் அனுமதி அளித்திருப்பது, அதிக பொருளாதார நெருக்கடியை கொடுக்க வேண்டும் என்ற டிரம்ப்பின் ராஜதந்திர செயல்களை முறியடிக்கும் வகையிலான விசயம் ஆகும். இதனால், ஈரானின் துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ள அமெரிக்காவை மீறி ஈரான் கப்பல்கள் செல்ல உதவும். ஈரானின் எண்ணெய் வர்த்தகம் தங்கு தடையின்றி தொடர்ந்து நடைபெறும் என எச்சரித்து உள்ளார்.

இது, அமெரிக்காவின் நெருக்கடியை ஈரான் தொடர்ந்து எதிர்க்க உதவும். அமெரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தான் மீண்டும் இரட்டை நிலைப்பாட்டை கையாண்டுள்ளது என அவர் கூறியுள்ளார். பாகிஸ்தானை நம்ப வேண்டாம் என்று அமெரிக்காவிடம், இஸ்ரேல் தொடர்ந்து கூறி வந்தது. இந்த சூழலில், டிரம்புடன் கைகுலுக்கி விட்டு ஈரானுக்கு 6 தரை வழிகளை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் திறந்து விட்ட தகவல் வெளியாகி உள்ளது.