ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு தலைவர்கள் புகைப்படம் 
உலக செய்திகள்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: தலைவர்கள் புகைப்படத்தில் பிரதமர் மோடியை மறைக்க பார்த்த பாகிஸ்தான்

பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில், எந்தவொரு எடிட்டிங்கும் செய்யப்படாத அசல் முழு புகைப்படத்தையும் அப்படியே வெளியிட்டார்.

இஸ்லாமாபாத்,

உலக நாடுகள் பங்கேற்ற மாநாட்டின் குழு புகைப்படத்தில் இருந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை பாகிஸ்தான் திட்டமிட்டு வெட்டி நீக்கிய சம்பவம் சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெட்டிசன்கள் வறுத்தெடுத்ததால், பாகிஸ்தான் பிரதமர் அவசர அவசரமாக அசல் புகைப்படத்தை வெளியிட்டு பல்டி அடித்துள்ளார்.

குரூப் போட்டோ

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு பிஷ்கேக் நகரில் நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். மாநாட்டின் முடிவில், அனைத்து நாட்டு தலைவர்களும் வரிசையாக நின்று ‘குரூப் போட்டோ’ எடுத்துக்கொண்டனர்.

மோடி படம் மாயம்

இந்த புகைப்படத்தை பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டது. அதைப்பார்த்த நெட்டிசன்களுக்கு தூக்கி வாரிப்போட்டது. காரணம், அந்த புகைப்படத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் படம் திட்டமிட்டு வெட்டி நீக்கப்பட்டு இருந்தது.

சுயவிளம்பர அரசியல்

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பை மட்டுமே ஹைலைட் செய்து, அவரை மையப்பகுதியில் கம்பீரமாக காட்டுவதற்காக அந்த நாட்டு டிஜிட்டல் குழுவினர் இந்த தில்லுமுல்லு வேலையை செய்ததாக கூறப்படுகிறது. சர்வதேச மாநாட்டின் அசல் புகைப்படத்திலேயே பாகிஸ்தான் கைவரிசை காட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மோடி கொடுத்த பதில்

பாகிஸ்தானின் இந்த சிறுபிள்ளைத்தனமான செயலுக்கு இந்திய தரப்பில் இருந்து தரமான பதில் கொடுக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில், எந்தவொரு எடிட்டிங்கும் செய்யப்படாத அசல் முழு புகைப்படத்தையும் அப்படியே வெளியிட்டார். அதில் பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பும் மற்ற உலக தலைவர்களுடன் ஒன்றாக நிற்கும் காட்சி அப்பட்டமாக தெரிந்தது.

பாகிஸ்தான் பிரதமர் ‘திடீர்’ பல்டி

அசல் படம் வெளியானதை தொடர்ந்து, பாகிஸ்தான் அரசு சமூக வலைதளங்களில் உலக அளவில் கடுமையான கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானது. சர்ச்சை விஸ்வரூபம் எடுத்ததால் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், அடுத்த சில மணி நேரங்களிலேயே அவசர அவசரமாக நடவடிக்கையில் இறங்கினார். உடனடியாக தனது சமூக வலைதள பக்கத்தில், பிரதமர் மோடி இருக்கும் அசல் முழு புகைப்படத்தையும் பகிர்ந்து பல்டி அடித்தார். இந்த விவகாரம் தற்போது இணையதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

SCROLL FOR NEXT