உலக செய்திகள்

ஹார்முஸ் ஜலசந்தியில் தரை தட்டி நின்ற சரக்கு கப்பலால் பரபரப்பு

ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

ஹார்முச் ஜலசந்தியில் சரக்கு கப்பல் ஒன்று தரை தட்டி நின்றதால் மாலுமிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக ஈரான் அரசு தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது; ஈரான் அரசு கூறிய வழித்தடத்தை பின்பற்றாமல் சென்ற வெளிநாட்டு சரக்கு கப்பல் ஒன்று தரைதட்டி சிக்கியது.பாதிக்கப்பட்ட கப்பல் வெளிநாட்டைச் சேர்ந்த கண்டெய்னர் சரக்கு கப்பல் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது எந்த நாட்டைச் சேர்ந்தது என்பது உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் அனைத்து கப்பல்களும், ஈரானின் புரட்சிகர காவல் படை வழங்கும் வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அந்த செய்தியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி

ஈரான் - அமெரிக்கா இடையே ஏற்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தின்படி, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் தடையின்றி அனுமதிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா கூறி வருகிறது. ஆனால், அங்கு இடையூறை ஈரான் ஏற்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனால், அந்த ஜலசந்தியை ஒட்டிய பகுதியில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.

புதிய வழித்தடம்

இதற்கிடையில், கடந்த வார இறுதியில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பரபரப்பான சூழல் நிலவிய நிலையில், ஹார்முச் ஜலசந்திக்கு மாற்றாக ஓமன் கடலோரப் பகுதி வழியாக புதிய கப்பல் போக்குவரத்து பாதையை உருவாக்கும் முயற்சியில் ஓமன் அரசும், ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அமைப்பும் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.