உலக செய்திகள்

ஜெர்மனியில் துப்பாக்கி சூடு: 5 பேர் உயிரிழப்பு

ஜெர்மனியின் ஹாம்பர்க் நகருக்கு மேற்கே அமைந்துள்ள ஸ்டாடே நகரில் சுமார் 50 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.

ஜெர்மனியின் வடக்கு பகுதியில் உள்ள ஸ்டாடே நகரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் மற்றொருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், இளைஞர் நல மையம் ஒன்றின் அருகே துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாகவும், சம்பவ இடத்தில் தீவிர தேடுதல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். பொதுமக்கள் தங்களது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சம்பவம் நடந்த பகுதிக்கு செல்ல வேண்டாம். அந்தப் பகுதியைத் தவிர்த்து செல்லுங்கள் என்றும் போலீசார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

ஜெர்மனியின் ஹாம்பர்க் நகருக்கு மேற்கே அமைந்துள்ள ஸ்டாடே நகரில் சுமார் 50 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது ஜெர்மனியில் துப்பாக்கி வைத்திருப்பதற்கான சட்டங்கள் மிகவும் கடுமையானவை. குறிப்பாக, 25 வயதுக்குட்பட்டவர்கள் துப்பாக்கி உரிமம் பெற மனநல பரிசோதனையில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். இதற்கு முன்பு, கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் ஹாம்பர்க் நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், யெகோவாவின் சாட்சிகள் மத அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் அந்த அமைப்பைச் சேர்ந்த 6 பேரை சுட்டுக் கொன்றதுடன், பின்னர் தன்னையும் சுட்டுக்கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.