சியோல்,
தென் கொரியாவின் கல்லூரி நுழைவுத் தேர்வில் (சுனியுங்) செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடந்த முறைகேடு மற்றும் அதனைத் தடுக்க எடுக்கப்பட்ட அவசர நடவடிக்கைகளால் ஏற்பட்ட குழப்பங்களுக்கு பொறுப்பேற்று, அந்நாட்டின் கல்வி அமைச்சர் சோய் கியோ-ஜின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தென் கொரியாவில் கடந்த 15-ம் தேதி அன்று, தேசிய வரிக் கணக்காளர் தேர்வில் முதலிடம் பிடித்த நபர், சிறிய கேமரா, ஸ்மார்ட்போன் மற்றும் ஏஐ கருவிகளைப் பயன்படுத்தி முறைகேடு செய்ததாக ஒப்புக்கொண்டார். இந்த செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, 4 நாட்களில் நடைபெறவிருந்த சுனியுங் எனப்படும் கல்லூரி நுழைவுத் தேர்விலும் இதேபோன்ற தொழில்நுட்ப முறைகேடுகள் நடக்கலாம் என்ற அச்சம் எழுந்தது.
இதையடுத்து கடந்த 19-ம் தேதி அன்று தென் கொரியா முழுவதும் 1,312 தேர்வு மையங்களில் சுமார் 5.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 'சுனியுங்' தேர்வை எழுதினர். முறைகேடுகளைத் தடுக்க கல்வி அமைச்சகம் கடைசி நேரத்தில் அதிரடி கட்டுப்பாடுகளை விதித்தது.
• தேர்வு மையங்களுக்கு அருகிலுள்ள பொது வை-பை சேவைகள் முடக்கப்பட்டன.
• மாணவர்களின் மூக்குக் கண்ணாடிகள், கைக்கடிகாரங்கள் மற்றும் ஆடைகளில் ஏதேனும் மின்னணு சாதனங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா என தீவிர சோதனை நடத்தப்பட்டது.
• நாடு முழுவதும் அவசர ஒலி எச்சரிக்கை அனுப்பப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
முன்கூட்டியே திட்டமிடாமல் கடைசி நேரத்தில் கொண்டு வரப்பட்ட இந்த விதிகளால் தேர்வு மையங்களில் கடும் குழப்பம் நிலவியது. மாணவர்களும் தேர்வுக் கண்காணிப்பாளர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதற்கிடையே, தேர்வு நாளில் அனுமதிக்கப்படாத மின்னணு சாதனங்களை வைத்திருந்ததாக 111 முறைகேடு வழக்குகள் பதிவாகின.
தொழில்நுட்ப முறைகேடுகளை முன்கூட்டியே கணித்து தடுக்கத் தவறியதாலும், அவசரக் கட்டுப்பாடுகளால் மாணவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு பொறுப்பேற்றும் கல்வி அமைச்சர் சோய் கியோ-ஜின் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்நாட்டின் அதிபர் லீ ஜே மியுங் அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளார்.