சியோல்,
தென் கொரியாவின் பிரபல ‘ஸ்மைல்கேட்’ கேமிங் நிறுவனத்தின் நிறுவனரான குவான் ஹியுக்-பின், தனது மனைவியுடனான விவாகரத்து வழக்கில் 2.55 டிரில்லியன் வான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.17,000 கோடிக்கும் அதிகம்) சொத்துப்பங்கீடாக வழங்க வேண்டும் என்று சியோல் குடும்ப நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தென் கொரிய வரலாற்றிலேயே விவாகரத்து வழக்கொன்றில் வழங்கப்பட்ட மிக உயர்ந்த தொகை இதுவேயாகும்.
தென் கொரியாவின் பிரபல ‘ஸ்மைல்கேட்’ கேமிங் நிறுவனத்தின் உரிமையாளர் குவான் ஹியுக்-பின். இந்த நிறுவனத்தில், பிளாக்பஸ்டர் துப்பாக்கி சுடுதல் விளையாட்டான ‘கிராஸ்பயர்’ மற்றும் ‘லாஸ்ட் ஆர்க்’ போன்ற உலகப் புகழ்பெற்ற கேம்கள் உருவாக்கப்பட்டன. ஸ்மைல்கேட் நிறுவனத்தின் முழு பங்குகளும் குவான் ஹியுக்-பின் வசம் மட்டுமே இருந்தன. கடந்த 2001-ம் ஆண்டு குவானுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், குவானின் மனைவி லீ ஹ்வா-ஜின், கடந்த நவம்பர் 2022-ம் ஆண்டு விவாகரத்து மற்றும் சொத்து பிரிப்பு கோரி சியோர் குடும்பநல நீதிமன்றத்தை நாடினார்.
சுமார் 4 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை நீதிமன்றம் நேற்று வெளியிட்டுள்ளது. அப்போது குவான்-லீ தம்பதியருக்கு விவாகரத்து வழங்குவதாக நீதிமன்றம் அறிவித்தது.
அத்துடன் குவான் தனது நிறுவனத்தின் 35 சதவீதப் பங்குகளை 2.5 டிரில்லியன் வான் (இந்திய மதிப்பில் ரூ.15000 கோடிக்கு மேல்) மனைவிக்கு உடனடியாக மாற்ற வேண்டும். இதுதவிர கூடுதலாக 65 பில்லியன் வான் (ரூ.461.93 கோடி ரூபாய்) ரொக்கப் பணமாகவும் லீ-க்கு வழங்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தம்பதியினர் இருவருமே திருமண முறிவுக்கு சமமான பொறுப்பைக் கொண்டிருப்பதால், தனிப்பட்ட ஜீவனாம்சக் கோரிக்கைகளை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நிறுவனத்தின் பங்குகளைப் பிரித்து கொடுக்க குவான் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், கடந்த 2002-ம் ஆண்டு நிறுவனம் தொடங்கப்பட்ட ஆரம்ப காலத்தில் லீ நிதி ரீதியாக உதவினார் என்றும், நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) மற்றும் இயக்குநராகப் பதவி வகித்து அதன் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினார் என்றும் லீ-யின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நிறுவனத்தின் மதிப்பு உயர்விலும், குடும்ப பராமரிப்பு மற்றும் குழந்தைகளை வளர்ப்பதிலும் லீ-யின் நீண்டகால பங்களிப்பு இருந்ததால் இந்த 35 சதவீதப் பங்கு பிரிப்பு முற்றிலும் நியாயமானது என தீர்ப்பளித்தனர்.
இதற்கு முன்னதாக, தென் கொரியாவின் பிரபல எஸ்கே குரூப் தலைவர் சே டே-வோன் தனது விவாகரத்து வழக்கில் 944 பில்லியன் வான் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டதே நாட்டின் பெரிய விவாகரத்து செட்டில்மென்ட்டாக இருந்தது. தற்போது குவான் ஹியுக்-பினுக்கு விதிக்கப்பட்டுள்ள 2.55 டிரில்லியன் வான் தொகை, அந்தப் பழைய சாதனையை விட 2 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.