உலக செய்திகள்

ஸ்டார் ஷிப் விண்கலத்தை முதல்முறையாக வெற்றிகரமாக பூமியில் தரையிறக்கி ஸ்பேஸ் எக்ஸ் சாதனை

விண்கலத்தில் இருந்த செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக பிரிந்து புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.

வாஷிங்டன்,

ஸ்டார் ஷிப் விண்கலத்தை முதல்முறையாக வெற்றிகரமாக பூமியில் தரையிறக்கி ஸ்பேஸ் எக்ஸ் சாதனை படைத்துள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ்

அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ். உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான இந்நிறுவனம் பல்வேறு செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி வருகிறது. மேலும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகள், விண்கலங்களையும் சோதனை செய்து வருகிறது.

ஸ்டார் ஷிப் 15 விண்கலம்

இந்நிலையில், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார் பேஸ் தளத்தில் இருந்து கடந்த 14ம் தேதி ஸ்டார் ஷிப் 15 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட் மூலம் விண்கலம் ஏவப்பட்ட நிலையில் அதில் 26 அடுத்த தலைமுறை ஸ்டார்லிங் வி 3 செயற்கைக்கோள்கள் கொண்டு செல்லப்பட்டன.

புவி வெளி வட்டப்பாதையில் விண்கலத்தை செலுத்தியப்பின் சூப்பர் ஹெவி பூஸ்டரை மீண்டும் பூமியில் தரையிறக்க ஸ்பேஸ் எக்ஸ் முயற்சித்தது. ஆனால், அந்த முயற்சி தோல்வியடைந்தது.

அதேவேளை, விண்கலத்தில் இருந்த செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக பிரிந்து புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. இதையடுத்து, ஸ்டார் ஷிப் 15 விண்கலம் சுமார் 22 மணி நேரம் புவி வட்டப்பாதையில் 14 முறை சுற்றியது. இதனை தொடர்ந்து ஸ்டார் ஷிப் 15 விண்கலத்தை மீண்டும் பூமிக்கு கொண்டு வர செயல்திட்டம் அமல்படுத்தப்பட்டது.

மீண்டும் பூமிக்கு திரும்பிய விண்கலம்

அதன்படி, புவி வட்டப்பாதையில் சுற்றிய ஸ்டார் ஷிப் 15 விண்கலம் மீண்டும் பூமிக்கு திரும்பியது. டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார் பேஸ் தளத்தில் உள்ள ஏவுதள கோபுரத்தின் ‘சாப்ஸ்டிக்’ எந்திர கைகளை மூலம் முதன்முறையாக விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்க முயற்சி தொடங்கப்பட்டது. புவி வட்டப்பாதையில் இருந்து பூமிக்கு வந்த ஸ்டார் ஷிப் 15 விண்கலம் ஏவுதள கோபுரத்தில் உள்ள எந்திர கைகளில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

புவி வட்டப்பாதைக்கு சென்ற விண்கலம் மீண்டும் பூமிக்கு திரும்பி வெற்றிகரமாக தரையிறங்குவது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் விண்கலத்தை மீண்டும் பயன்படுத்தும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முயற்சிக்கு மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT