உலக செய்திகள்

வங்காளதேச நாடாளுமன்றத்திற்கு போட்டியின்றி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான அகமது சுதந்திர போராட்ட வீரர் ஆவார்.

டாக்கா

வங்காளதேசத்தில் 2024-ம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டம் தொடர்ச்சியாக ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறினார். அவர், இந்தியாவிற்கு வந்து தஞ்சமடைந்து உள்ளார். இதனை தொடர்ந்து, அந்நாட்டில் 13-வது தேசிய நாடாளுமன்றத்திற்கான பொது தேர்தல் பிப்ரவரி 12-ந்தேதி நடைபெற்றது. அதன்பின்னர் வாக்கு எண்ணிக்கையும் உடனடியாக நடந்து முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதில், வங்காளதேச தேசியவாத கட்சி வேட்பாளர்கள் 209 இடங்களில் வெற்றி பெற்றனர். அக்கட்சி தலைமையிலான கூட்டணி, ஆட்சியமைக்க தேவையான அளவுக்கும் கூடுதலாக, மொத்தம் 212 இடங்களை கைப்பற்றியது. ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி 68 இடங்களை வென்றது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து, வங்காளதேச தேசியவாத கட்சியை சேர்ந்த தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராக கடந்த பிப்ரவரி 17-ந்தேதி பதவியேற்று கொண்டார். இதற்காக, வங்காளதேச தேசியவாத கட்சியின் உறுப்பினர்கள் சேர்ந்து தாரிக்கை நாடாளுமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுத்தனர். இதன்பின்பு, அவருக்கு வங்காளதேச ஜனாதிபதி முகமது சஹாபுதீன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்களுக்கும் அழைப்பு விடப்பட்டது. அந்நிகழ்ச்சியில் இந்தியா சார்பில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டார்.

இந்த சூழலில், வங்காளதேச நாடாளுமன்றத்திற்கு சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் போட்டியின்றி இன்று தேர்வு செய்யப்பட்டனர். இதில், சபாநாயகராக ஹபீசுதீன் அகமது தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான அகமது சுதந்திர போராட்ட வீரரும் ஆவார்.

இதற்கு முன்பு அவர் விடுதலை போர் விவகாரங்களுக்கான மந்திரியாக பதவி வகித்திருக்கிறார். வங்காளதேச தேசியவாத கட்சியின் நிலைக்குழு உறுப்பினரும் ஆவார். துணை சபாநாயகராக கெய்சர் கமல் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இளம் எம்.பி.யான அவர் வழக்கறிஞர் பணியில் ஈடுபட்டு வருகிறார்.