உலக செய்திகள்

1983-ம் ஆண்டு, தமிழர்களுக்கு எதிராக நடந்த இலங்கை இனக்கலவரத்தை ஆய்வு செய்ய நாடாளுமன்ற குழு நியமனம்

1983-ம் ஆண்டு இலங்கை இனக்கலவரம் குறித்து ஆராய நாடாளுமன்ற தேர்வுக்குழுவை இலங்கை அரசு அமைத்துள்ளது.

கொழும்பு,

கடந்த 1983-ம் ஆண்டு, தமிழர்களுக்கு எதிராக நடந்த இலங்கை இனக்கலவரத்தை ஆய்வு செய்ய நாடாளுமன்ற குழுவை இலங்கை அரசு அமைத்துள்ளது.

3 ஆயிரம் தமிழர்கள் பலி

இலங்கையில், கடந்த 1983-ம் ஆண்டு ஜூலை 23-ந் தேதி அங்குள்ள தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரம் வெடித்தது. ஜூலை 30-ந் தேதிவரை இலங்கை முழுவதும் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 3 ஆயிரம் தமிழர்கள் பலியானார்கள். இந்த சம்பவம், 'கருப்பு ஜூலை' என்று அழைக்கப்படுகிறது. இக்கலவரம் தமிழ்நாட்டிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கலவரத்தைத் தொடர்ந்து, ஏராளமான தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து தஞ்சம் அடைந்தனர்.

நாடாளுமன்ற குழு

இந்நிலையில், 1983-ம் ஆண்டு இலங்கை இனக்கலவரம் குறித்து ஆராய நாடாளுமன்ற தேர்வுக்குழுவை இலங்கை அரசு அமைத்துள்ளது. இதை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னா தெரிவித்தார்.

பெண்கள் விவகாரத்துறை மந்திரி சாவித்ரி பால்ராஜ் தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில், 2 தமிழ் எம்.பி.க்களும் இடம் பெற்றுள்ளனர்.

இனக்கலவரத்தின் பாதிப்பை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடுகளை குழு பரிந்துரைக்கும் என்று ஜகத் விக்ரமரத்னா கூறினார்.

தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அக்குழு நாடாளுமன்றத்துக்கு தனது பரிந்து ரைகளை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT