உலக செய்திகள்

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு: காவல்துறை அதிகாரி, பாதுகாப்பு செயலாளருக்கு மரண தண்டனை

இலங்கையில் 2019-ம் ஆண்டு ஈஸ்டர் திருநாளின்போது 3 தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 279 பேர் கொல்லப்பட்டனர்.

கொழும்பு,

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் அலட்சியமாக இருந்த இரு அதிகாரிகளுக்கும் மரண தண்டனை விதித்து கொழும்பு சிறப்பு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

தற்கொலைப்படை தாக்குதலில் 279 பேர் பலி

இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் திருநாளின்போது, 3 தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 279 பேர் கொல்லப்பட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் நடப்பதற்கு முன்பே, இந்திய உளவுத்துறை இதுகுறித்து இலங்கை அரசுக்கு துல்லியமான எச்சரிக்கைகளை அனுப்பியிருந்தது.

வழக்குப்பதிவு

இருப்பினும், முன்கூட்டியே கிடைத்த உளவுத்துறை தகவல்களை அலட்சியப்படுத்தி, பொதுமக்களைக் காப்பாற்றத் தவறியதாக அன்றைய காவல் துறை தலைமை அதிகாரி புஜித் ஜெயசுந்தர (வயது 66) மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஹேமஸ்ரீ பெர்னாண்டோ(76) ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. கடமை தவறியது, கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

மரண தண்டனை

இந்த வழக்கை கொழும்பு சிறப்பு ஐகோர்ட்டின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் அலட்சியமாக இருந்த இரு அதிகாரிகளுக்கும் மரண தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர வாய்ப்புள்ளது. எனினும், இலங்கையில் 1976 முதல் மரண தண்டனைகளுக்கு தற்காலிக தடை இருப்பதால், இந்த தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட வாய்ப்புள்ளது.