உலக செய்திகள்

இலங்கையில், ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள் மீண்டும் திறக்கப்படுகிறது

குண்டு வெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து அங்குள்ள தேவாலயங்களில் பிரார்த்தனைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுப் பிரார்த்தனைக் கூட்டங்கள், மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு,

ஏசுபிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகையை கடந்த 21ந்தேதி உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவ பெருமக்கள் கொண்டாடிய வேளையில், இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் உலகை உலுக்கின. கிறிஸ்தவ ஆலயங்களையும், நட்சத்திர ஓட்டல்களையும் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த குண்டுவெடிப்புகளில் 11 இந்தியர்கள் உள்பட 253 பேர் கொல்லப்பட்டிருப்பது ஈர இதயங்களை நொறுங்கச்செய்தது.

இந்த தொடர் குண்டுவெடிப்புகளில், சீனர்கள் 4 பேர், டென்மார்க் நாட்டினர் 3 பேர், அமெரிக்கா, ஜப்பான், நெதர்லாந்து, போர்ச்சுக்கல், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் என வெளிநாட்டினர் மொத்தம் 42 பேர் பலியாகி இருப்பது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தின. வெளிநாட்டினர் 12 பேரை காணவில்லை. கொழும்பு நகரில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல்களான சின்னமன் கிராண்ட், தி ஷாங்கிரி லா, தி கிங்க்ஸ்பரி ஆகியவை தொடர் குண்டுவெடிப்புகளில் பெருத்த சேதத்தை சந்தித்துள்ளன. இந்த குண்டுவெடிப்புகளை நடத்தியது நாங்கள் தான் என்று ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இருப்பினும், இலங்கை அரசு, உள்நாட்டில் இயங்கி வருகிற தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தினர் மீது குற்றம்சாட்டி வருகிறது.

இந்த குண்டுவெடிப்புகளில் தமிழ்வழிக் கல்வி ஆசிரியர் ஒருவர், பள்ளிக்கூட முதல்வர் ஒருவர் உள்பட 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நாசவேலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் ஒரு கண்டெய்னர் லாரியிலும், வேனிலும்தான் கொண்டு வரப்பட்டதாக தெரிய வந்தது. இலங்கையில், அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரம் பெற்றது.

இதற்கிடையில், குண்டு வெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து அங்குள்ள தேவாலயங்களில் பிரார்த்தனைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுப் பிரார்த்தனைக் கூட்டங்கள், மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கை கத்தோலிக்க பாதிரியார் மால்கம் ரஞ்சித் கூறுகையில், தொடர் குண்டுவெடிப்புக்குப் பிறகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொது பிரார்த்தனைக் கூட்டங்கள், வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் நடத்தப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சில தேவாலயங்களில் மட்டும் அத்தகைய பிரார்த்தனைக் கூட்டங்கள் நடைபெறும். பாதுகாப்பு காரணங்களுக்காக, தேவாலயங்களுக்குள் பைகள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படாது. அத்துடன், அறிமுகமில்லாத புதிய நபர்கள் தேவாலயத்துக்குள் செல்வதற்கும் அனுமதி அளிக்கப்படாது. இதற்காக, உள்ளூர் மக்களைக் கொண்ட கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும்.

தேவாலயங்களுக்கு வரும் நபர்களின் அடையாளத்தை அந்தக் குழுக்கள் உறுதி செய்த பிறகே அவர்கள் பிராத்தனைக் கூடங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்றார்