கொழும்பு,
இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று இலங்கை சென்றார். 49 பேர் அடங்கிய தூதரக அதிகாரிகள் குழுவுடன் இலங்கை சென்ற சி.பி.ராதாகிருஷ்ணனை, விமான நிலையத்தில் அந்நாட்டின் விளையாட்டுத்துறை மந்திரி சுனில் குமார கமகே மற்றும் பல்வேறு முக்கிய அதிகாரிகள் நேரில் சென்று வரவேற்றனர்.
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் இலங்கைக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். தொடர்ந்து இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகேவை சி.பி.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இருநாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
குறிப்பாக இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் வீட்டுவசதித் திட்டம் மற்றும் இலங்கையில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக இந்தியா வழங்கிய 450 மில்லியன் டாலர் நிதியுதவியின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கான மறுவாழ்வு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக கலந்துரையாடினர்.
பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, முல்லைத்தீவில் ஒரு மருத்துவ வார்டு கட்டுதல், தெகியட்டகண்டியா பகுதியில் குறைமாதக் குழந்தை நலப் பிரிவு நிறுவுதல், முத்தூரில் கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் மனநலப் பிரிவுகளைக் கட்டுதல் உள்ளிட்ட 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர்.
தொடர்ந்து இலங்கை பிரதமரும், கல்வி மந்திரியுமான ஹரினி அமரசூரியாவை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இலங்கை கல்வித்துறையில் இருநாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருவரும் கலந்துரையாடினார்.
மேலும், இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் கல்வி அறக்கட்டளையின் கல்வி உதவித்தொகை திட்டத்தை மேம்படுத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதோடு, இந்திய வீட்டுவசதித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ், இலங்கையில் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டதையும் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, நுவரெலியாவில் இந்திய வம்சாவளி தமிழர்களுடன் கலந்துரையாடியபோது, டிட்வா புயலால் ஏற்பட்ட பேரழிவு குறித்து ராதாகிருஷ்ணன் தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியதுடன், 'ஆபரேஷன் சாகர் பந்து' திட்டத்தின் கீழ் இந்தியா மேற்கொண்ட உடனடி நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தார். மேலும், சி.பி.ராதாகிருஷ்ணன் சீதா எலியாவில் உள்ள சீதை அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். இதையடுத்து, இலங்கையில் தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று டெல்லி புறப்பட்டார்.