ரியாத்,
சவுதி அரேபியாவில் இலங்கை தமிழர் அனோஜன் சிவராஜாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இலங்கையை சேர்ந்த தமிழர் அனோஜன் சிவராஜா (வயது 27). இந்து மதத்தை சேர்ந்த இவர் சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்தார்.
இதனிடையே, இலங்கையில் கடந்த ஜுன் மாதம் இந்து மதத்தினர் பலரும் யாழ்பாணத்தில் உள்ள இந்து மதக்கடவுள் முருகன் கோவிலுக்கு பாத யாத்திரையாக சென்றனர். அப்போது, கோவிலுக்கு செல்லும் பக்தர்களுடன் செல்லப்பிராணி நாய் பின்தொடர்ந்து சென்றுள்ளது. அந்த செல்லப்பிராணி நாய் இலங்கையில் பிரபலமான நிலையில் கோவில் அருகே சுற்றித்திரிந்த அந்த செல்லப்பிராணி நாயை இஸ்லாமிய மதத்தை சேர்ந்த நபர் அடித்து விரட்டி அதை வீடியோவாக எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் இது இரு மதத்தினர் இடையேயான கருத்து மோதலாக பேஸ்புக்கில் உருவானது.
அப்போது, அந்த வீடியோவுக்கு கீழே கமண்ட் பிரிவில் இந்து மதக்கடவுள் சிவபெருமான் குறித்து ஆபாசமான கருத்துக்களை இஸ்லாமிய மதத்தை சேர்ந்த நபர் தமிழில் பதிவு செய்திருந்தார். இதையடுத்து, அந்த பதிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்லாமிய மதக்கடவுள் அல்லா குறித்தும், இஸ்லாமிய மத இறைதூதர் முகமது நபி குறித்தும் இந்து மதத்தை சேர்ந்த அனோஜன் சிவராஜா ஆபாசமான கருத்துகளை தமிழில் பதிவிட்டார். பின்னர், அந்த பேஸ்புக் பதிவை நீக்கிய அனோஜன் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டிருந்தார்.
இதனிடையே, அனோஜன் சிவராஜா இஸ்லாமிய மதக்கடவுள் குறித்து தமிழில் பதிவிட்ட கருத்தை ஸ்கிரீன் ஸ்டார்ட் எடுத்து அதை அரபிய மொழியில் மொழிப்பெயர்த்து இலங்கையை சேர்ந்த சிலர் சவுதி அரேபியாவில் அனோஜன் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளனர். அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இது குறித்து சவுதி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து இஸ்லாமிய மதக்கடவுளை அவமதித்ததாக அனோஜன் சிவராஜாவை சவுதி அரேபியா போலீசார் ஜுலை மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், அவருக்கு எதிரான வழக்கு சவுதி கோர்ட்டில் நடைபெற்ற நிலையில் அந்த வழக்கில் அனோஜனுக்கு முதலில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை, 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமாக விதிக்கப்பட்டது.
பின்னர், இந்த வழக்கின் மேல்முறையீட்டில் அனோஜன் சிவராஜாவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் மரண தண்டனை விதித்து சவுதி கோர்ட்டு உத்தவிட்டது.
அதேவேளை, அனோஜனுக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து இலங்கையில் போராட்டம் நடைபெற்றது. இந்தியாவிலும் அனோஜனுக்கு ஆதரவு குரல் எழுந்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சவுதி அரேபியாவுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. மேலும், இலங்கை சட்ட வல்லுநர்கள் அடங்கிய குழுவையும் அந்நாட்டு அரசு சவுதி அரேபியாவுக்கு அனுப்பி அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு தாக்கல் செய்தது.
இந்நிலையில், அனோஜன் சிவராஜாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சவுதி அரேபியா சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்துள்ளது. அனோஜனின் மரண தண்டனை ரத்து விவகாரத்தில் இலங்கை அரசின் சட்டரீதியிலான முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் சவுதி அரேபியா அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் இலங்கை வெளியுறவுத்துறை இணை மந்திரி தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இலங்கை தமிழர் அனோஜன் சிவராஜாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் விடுதலை செய்யப்படுவாரா? அல்லது அவருக்கு ஏற்கனவே விதிக்கப்பட சிறை தண்டனை தொடருமா? அவரது நிலை தற்போது என்ன? என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை. அனோஜன் சிவராஜாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்ட நிலையில் இலங்கையில் அவரது உறவினர்கள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் ஆறுதல் அடைந்துள்ளனர்.