உலக செய்திகள்

ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க முடியாது: ஈரான் திட்டவட்டம்

ஹார்முஸ் ஜலசந்தியில் தனது ஆதிக்கத்தை ஈரான் அதிகப்படுத்தியுள்ளது.

தெக்ரான்,

அமெரிக்கா-ஈரான் இடையேயான போரில் ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்ட நிலையில், பாகிஸ்தானில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.இதையடுத்து ஈரானுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடி கொடுக்கும் வகையில் ஹோர்முஸ் ஜலசந்தியை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டுள்ளது.இதில் ஈரான் துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்கள் மற்றும் அங்கிருந்து வெளியேறும் கப்பல்களை அமெரிக்க கடற்படை தடுத்து வருகிறது. மேலும் ஈரான் தொடர்புடைய 2 கப்பல்களையும் சிறைபிடித்தது. இதனால் 2-வது கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஈரான் மறுத்துவிட்டது.

மேலும் ஹார்முஸ் ஜலசந்தியில் தனது ஆதிக்கத்தை ஈரான் அதிகப்படுத்தியுள்ளது. அந்த ஜலசந்தியை கடக்க முயன்ற 3 வர்த்தக கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 2 கப்பல்களை சிறைபிடித்துள்ளது.ஈரானின் தாக்குதலில் சிக்கிய கப்பல்கள் லைபீரிய நாட்டு கொடி கொண்ட எபமினோண்டாஸ், பனாமா கொடியை கொண்ட எம்.எஸ்.சி பிரான்செஸ்கா, யூபோரியா (ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சொந்தமான கப்பல்) ஆகியவை என்பது தெரியவந்துள்ளது.இதில் எபமினோண்டாஸ் கப்பல், இந்தியாவின் குஜராத் முந்த்ரா துறைமுகத்தை நோக்கி வந்ததாகும். இந்த கப்பல்கள் அனுமதியின்றி இயங்கின என்றும், தொடர்ச்சியான விதிமீறல்களில் ஈடுபட்டன என்றும் ஈரானிய புரட்சிகர காவல்படையின் கடற்படை தெரிவித்துள்ளது.அமெரிக்க கடற்படையின் முற்றுகை நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடா நாடுகளில் இருந்து செல்லும் வர்த்தக கப்பல்கள் மீது ஈரான் தாக்குதலை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அமெரிக்க கடற்படையின் முற்றுகை நடவடிக்கை நீடிக்கும்வரை ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க மாட்டோம் என்று ஈரான் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

போர் நிறுத்தம் என்பது கடல்வழி முற்றுகை மற்றும் உலகின் பொருளாதாரத்தைப் பிணைக்கைதிகளாகப் பிடிக்கும் செயல் ஆகியவை இல்லாமல் இருந்தல் மற்றும் அனைத்து முனைகளிலும் இஸ்ரேலின் போர்வெறி நிறுத்தப்பட்டிருத்தல் மட்டுமே அது அர்த்தமுள்ளதாக இருக்கும்.போர்நிறுத்தத்தின் இத்தகைய அப்பட்டமான மீறலுடன் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது சாத்தியமில்லை. அவர்கள் தங்கள் இலக்குகளை ராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் அடையவில்லை. மிரட்டல் மூலமாகவும் அடையப்போவதில்லை. ஈரானிய தேசத்தின் உரிமைகளை அங்கீகரிப்பதே முன்னேறுவதற்கான ஒரே வழி என்று தெரிவித்துள்ளார்.ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறும்போது, பேச்சுவார்த்தைகளுக்கு ஈரான் தயாராக உள்ளது. ஆனால் உறுதிமொழிகளை மீறுதல், முற்றுகை மற்றும் அச்சுறுத்தல்கள் ஆகியவை உண்மையான பேச்சுவார்த்தைகளுக்கு முக்கிய தடைகளாக உள்ளன என்றார்.

மேலும் அமெரிக்காவின் முடிவில்லாத பாசாங்குத்தனமான சொல்லாடல்களையும், கூற்றுகளுக்கும் செயல்களுக்கும் இடையிலான முரண்பாடுகளையும் உலகம் காண்கிறது என்று மசூத் பெசெஷ்கியன் விமர்சித்துள்ளார். இதற்கிடையே வளைகுடா நாடுகளின் தகவல் தொடர்பை முடக்கும் விதமாக ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கடலுக்கடியில் செல்லும் டேட்டா கேபிள்களை சேதப்படுத்தப் போவதாக ஈரான் மறைமுகமாக எச்சரித்துள்ளது.