பறவை 
உலக செய்திகள்

சிகாகோ விமான நிலையத்தில் விசித்திர பறவை அட்டகாசம்: பயணிகள் அலறியடித்து ஓட்டம்!

நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு, விமான நிலையத்தின் துப்புரவுப் பணியாளர் ஒருவர், மிகவும் சாதுரியமாக தனது சட்டையைக் கொண்டு அந்த பறவையை பாதுகாப்பாக பிடித்தார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் சிகாகோ ஓஹேர் சர்வதேச விமான நிலையத்திற்குள் திடீரென புகுந்த விசித்திரமான பச்சை நிறப் பறவை ஒன்று, பயணிகளை ஆக்ரோஷமாகத் தாக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திடீர் நுழைவும் பரபரப்பும்

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் சிகாகோ ஓஹேர் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தின் டெர்மினல் 5 பகுதியில் உள்ள ஏர் பிரான்ஸ் செக்-இன் கவுண்ட்டருக்குள் கடந்த 13-ந்தேதி அன்று கிளி போன்ற தோற்றம் கொண்ட பச்சை நிற பறவை ஒன்று நுழைந்து, அங்குமிங்கும் பறந்து திரிந்தது. ஆரம்பத்தில் இதைப் பார்த்த பயணிகள் ஆச்சரியமடைந்து, அதன் அருகில் சென்று ரசிக்கவும், புகைப்படம் எடுக்கவும் முயன்றனர்.

பயணிகளைத் தாக்கிய பறவை

எதிர்பாராதவிதமாக அந்த பறவை திடீரென ஆக்ரோஷமாக மாறி, பயணிகளை கொத்தத் தொடங்கியது. பயணிகளின் தலை மற்றும் உடைமைகளின் மீது அமர்ந்து கொண்டு, அது அச்சுறுத்தத் தொடங்கியதால், பயந்துபோன பயணிகள் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் ஓடினர்.

நேரில் பார்த்த ஊழியர் விளக்கம்

இதுகுறித்து அங்கு பணிபுரியும் பாரிஸ் எல்பர்ட் என்ற ஊழியர் கூறுகையில், "யாராவது அந்த பறவையை அன்போடு அணுகினாலோ அல்லது பிடிக்க முயன்றாலோ, அது பயந்து ஓடுவதற்குப் பதிலாக, மனிதர்களோடு சண்டையிடத் தொடங்குகிறது" என்று அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

சாதுரியமாகப் பிடித்த பணியாளர்

நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு, விமான நிலையத்தின் துப்புரவுப் பணியாளர் ஒருவர், மிகவும் சாதுரியமாக தனது சட்டையைக் கொண்டு அந்த பறவையை பாதுகாப்பாக பிடித்தார். இந்த சம்பவத்தால் விமான சேவைகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், பயணிகளுக்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கால்நடை மருத்துவரிடம் ஒப்படைப்பு

இதையடுத்து, அந்த பறவை யாருடையதாவது காணாமல் போன செல்லப் பிராணியா என்பதைக் கண்டறியவும், அதற்கு உரிய மருத்துவப் பரிசோதனை செய்யவும் உள்ளூர் கால்நடை அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்குள் பறவை அட்டகாசம் செய்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

SCROLL FOR NEXT