கார்டூமின்,
சூடானில் துணை மின் நிலையம் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலால் தலைநகர் கார்டூமினில் 12 மணிநேரத்திற்கும் மேலாக மின் தடை ஏற்பட்டுள்ளது.
வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான். அந்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார்.
அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார்.
இதனிடையே, துணை ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். இதற்கு ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ தலைமையிலான துணை ராணுவப்படையின் அதிவிரைவு ஆதரவு படையினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால், ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி முதல் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. துணை ராணுவம் கட்டுப்பாட்டில் இருந்த தலைநகர் கார்டூமினை கடந்த மார்ச் மாதம் ராணுவம் கைப்பற்றியது. அதேவேளை, ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதலில் அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், ராணுவத்தின் கடுப்பாட்டில் உள்ள தலைநகர் கார்டூமினில் உள்ள துணை மின் நிலையம் மீது துணை ராணுவம் நேற்று டிரோன் தாக்குதல் நடத்தியது.
இந்த டிரோன் தாக்குதலால் தலைநகர் கார்டூமின் முழுவதும் மின் தடை ஏற்பட்டது. கடந்த 12 மணி நேரத்திற்கு மேலாக தலைநகரில் மின் தடை ஏற்பட்டுள்ளது. மின் இணைப்பை சரி செய்யும் நடவடிக்கையில் மின்சார ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.