பிரேசிலா,
பிரேசிலில் பள்ளிக்குழந்தைகளை பணய கைதிகளாக பிடித்து கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பிரேசில். அந்நாட்டின் பரானா மாகாணம் சவோ பகுதியில் ஆரம்பப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இன்று மதியம் குழந்தைகள் வகுப்பறைகளில் கல்வி கற்றுக்கொண்டிருந்தன. அப்போது பள்ளிக்குள் புகுந்த நபர், 13 குழந்தைகளை பணய கைதிகளாக பிடித்து வைத்தார். 13 குழந்தைகளை ஒரு அறைக்குள் அடைத்து வைத்து அந்த அறை முழுவதும் தான் கொண்டுவந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிடுவதாக மிரட்டினார்.
இதையடுத்து விரைந்து சென்ற போலீசார், ராணுவத்தினர் குழந்தைகளை பணய கைதிகளாக பிடித்து வைத்திருந்த கடத்தல்காரரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், குழந்தைகளை விடுதலை செய்ய அந்த நபர் முன்வராததையடுத்து பள்ளிக்குள் அதிரடியாக நுழைந்த ராணுவத்தினர் 13 குழந்தைகளையும் அதிரடியாக மீட்டனர். மேலும், குழந்தைகளை பணய கைதிகளாக பிடித்து வைத்திருந்த நபரை சுட்டுக்கொன்றனர். சுட்டுக்கொல்லப்பட்ட நபரின் பெயர் உள்ளிட்ட எந்த விவரத்தையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.