லண்டன்,
தாஜ்மஹாலின் பளிங்கு கல் ஒன்று பிரிட்டனில் டிசம்பர் 9-ம் தேதி ஏலம் விடப்படுகிறது.
உலக அதிசயங்களுள் ஒன்றான நம் நாட்டின் தாஜ்மஹாலில் இருந்து 200 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டன் அதிகாரி ஒருவர் எடுத்துச் சென்ற அழகிய பூ வடிவ பளிங்குகல் ஒன்று அடுத்த மாதம் பிரிட்டனில் ஏலம் விடப்பட உள்ளது.
முகலாய பேரரசரான ஷாஜஹான் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவின் யமுனை ஆற்றங்கரையில் கட்டிய தாஜ்மஹால் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகவும், 'யுனெஸ்கோ' உலக பாரம்பரியச் சின்னமாகவும் திகழ்கிறது. கடந்த 1816-ல் தாஜ்மஹாலில் பராமரிப்பு பணியில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த கர்னல் பவ்னோல் பிலிப்ஸ் என்பவர், இங்கிருந்து இரண்டு பளிங்கு கற்களை எடுத்துச் சென்றார்.
அழகிய பூவேலைப்பாடுடன்கூடிய இந்த பளிங்கு கல்லின் வடிவமைப்பு, தாஜ்மஹாலுக்குள் உள்ள ஷாஜஹான் கல்லறையின் மேற்புற எல்லை வடிவத்துடன் ஒத்தது. பிலிப்ஸ் குடும்பத்தினரிடம் 200 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த இந்த பளிங்கு கற்களில் ஒன்று, தற்போது ஏலம் விடப்படுகிறது. பிரிட்டனின் 'லயன் அண்டு டர்ன் புல்' என்ற ஏல நிறுவனம், இஸ்லாமிய மற்றும் இந்திய கலைப் பொருட்கள் பிரிவின் கீழ் இந்த ஏலத்தை டிசம்பர் 9-ம் தேதி நடத்துகிறது. இந்த கல் இந்திய மதிப்பில் ரூ.31 லட்சம் வரை விலை போகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.