டோக்கியோ,
ஆசிய நாடுகளில் ஒன்றான ஜப்பானில் பிரதமராக சனே தகாய்ச்சி பதவி வகித்து வருகிறார். கூட்டணி கட்சிகளின் உதவியுடன் அவருடைய தலைமையில் முற்போக்கு ஜனநாயக கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த சூழலில், ஜப்பானில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்தது.
பிரதமரை தேர்ந்தெடுக்கும் இந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் வகையில், தகாய்ச்சியின் கட்சி 3-ல் 2 பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. சனே தகாய்ச்சி பெற்ற இந்த குறிப்பிடத்தக்க வெற்றியை தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
அவர் தேர்தலில் முன்னிலையில் இருக்கிறார் என செய்தி வந்தபோதே, தகாய்ச்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். இதனை முன்னிட்டு, அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், மக்கள் பிரதிநிதிகளுக்கான தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்ற சனே தகாய்ச்சிக்கு வாழ்த்துகள் என தெரிவித்து கொண்டார்.
தொடர்ந்து பிரதமர் மோடி, உலகளாவிய அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளம் ஆகியவற்றிற்கு இந்திய-ஜப்பான் சிறப்பு மூலோபாய மற்றும் உலகளாவிய நட்புறவானது ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்றும் தெரிவித்து கொண்டார்.
இதன்பின்னர், சனே தகாய்ச்சிக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பும் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இந்த தேர்தல் ஜப்பானின் வருங்காலத்திற்கு மிக முக்கியம் வாய்ந்த ஒன்று என குறிப்பிட்ட அவர், தகாய்ச்சி ஏற்கனவே வலிமையான, சக்தி படைத்தவர் மற்றும் அறிவாற்றல் படைத்த தலைவர் என நிரூபித்து இருக்கிறார். உண்மையாக நாட்டை நேசிப்பவர் அவர் என கூறினார்.
வருகிற மார்ச் 19-ந்தேதி வெள்ளை மாளிகையில் அவரை வரவேற்க நான் காத்திருக்கிறேன் என்றும் டிரம்ப் கூறினார். சமீபத்தில், டிரம்பும் அவருடைய குழுவினரும் ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டனர். அப்போது அவருடைய தலைமையை டிரம்ப் பெரிதும் பாராட்டினார்.
ஜப்பானில் சனே தகாய்ச்சி பெற்ற வெற்றியால், பாதுகாப்பு ஒருங்கிணைப்பு முதல் வர்த்தகம் மற்றும் முதலீடு என பல்வேறு துறைகளில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் பணிகளை ஜப்பான் தொடரும் வாய்ப்பு உள்ளது.
ஆசிய கூட்டணி நாடுகளில் ஒன்றான ஜப்பானுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா நோக்கம் கொண்டுள்ளது என்றும் தகவல் தெரிவிக்கின்றது. இதுபற்றி, ஜப்பானில் இருந்து வெளிவரும் தி ஜப்பான் டைம்ஸ் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தியில், ஜப்பான் பொது தேர்தலில் பிரதமர் சனே தகாய்ச்சியின் ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில், அந்நாட்டுடன் பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவதற்கான திட்டங்களுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்து உள்ளது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் புவிசார் அரசியலில் நிச்சயமற்ற நிலை அதிகரித்துள்ள சூழலில், கூட்டணியை மீண்டும் உறுதிப்படுத்தி கொள்ளும் புதுப்பிக்கப்பட்ட நோக்கில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.