வாஷிங்டன்,
அமெரிக்கா, ஈரான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
அதேவேளை, ஈரானுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினரை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
இதனிடையே, அமெரிக்கா , ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. இரு தரப்புக்கும் இடையே நேற்று முன் தினம் (17ம் தேதி) அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. 60 நாட்கள் காலக்கெடுவுடன் இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 60 நாட்களில் இரு தரப்பும் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடத்தி மோதலை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவது குறித்து முடிவு எடுக்க வேண்டும். இதற்காக இரு தரப்பும் சுவிட்சர்லாந்தில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தன. இந்த பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ், ஈரான் அதிகாரிகள் சுவிட்சர்லாந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையே சுவிட்சர்லாந்தில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்சின் சுவிட்சர்லாந்து பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, இஸ்ரேலுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவுக்கும் மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதல் முடிவுக்கு வராததால் அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை ரத்தானதாக தகவல் வெளியாகியுள்ளது. பேச்சுவார்த்தை ரத்தானதால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.