உலக செய்திகள்

‘ஈரானுடன் பேச்சுவார்த்தை தொடரும்’ - நெதன்யாகுவிடம் உறுதியளித்த டிரம்ப்

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சந்தித்து பேசினார்.

வாஷிங்டன்,

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்ற சூழல் எழுந்த நிலையில், சமீபத்தில் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அரசில் சிறப்பு தூதர்களாக உள்ள ஸ்டீவ் விட்காப் மற்றும் ஜாரேட் குஷ்னர் இருவரும் இதில் கலந்து கொண்டனர்.

ஈரான் சார்பில் வெளியுறவு மந்திரி அப்பாஸ் அரக்சி பேச்சுவார்த்தை நடத்தினார். ஏறக்குறைய 14 மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனையில், ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதற்கிடையில் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தின் வரம்புகள் மற்றும் ஹமாஸ், ஹிஸ்புல்லா உள்ளிட்ட ஆயுதக் குழுக்களுக்கான ஆதரவு ஆகியவை குறித்து ஈரானிடம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தி வருகிறது.

இந்த சூழலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்காவிற்கு சென்று அந்நாட்டின் அதிபர் டிரம்ப்பை நேற்று சந்தித்து பேசினார். முன்னதாக அமெரிக்கா புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய நெதன்யாகு, “இஸ்ரேல் மட்டுமின்றி, மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் அமைதி நிலவ ஈரானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அதிபர் டிரம்ப்பிடம் வலியுறுத்துவேன்” என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில், அமெரிக்க சிறப்பு தூதர்கள் ஸ்டீவ் விட்காப், ஜாரேட் குஷ்னர் ஆகிய இருவரையும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று சந்தித்து பேசினார். இதில், மண்டல விவகாரங்கள் பற்றிய ஆலோசனை நடந்தது. மேலும், ஈரானுடன் நடந்த முதல் கட்ட பேச்சுவார்த்தைகள் பற்றி நெதன்யாகுவிடம் அவர்கள் விளக்கி கூறினர்.

அதன் பின்னர் அதிபர் டிரம்ப் மற்றும் நெதன்யாகு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து செய்தியாளர்களிடம் நெதன்யாகு கருத்து எதுவும் தெரிவிக்காமல் வெள்ளை மாளிகையில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அதே சமயம், டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இந்த பேச்சுவார்த்தையில் உறுதியான நிலைப்பாடு எதுவும் எட்டப்படவில்லை.

ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியுமா? என்பதை தெரிந்து கொள்ளும் வரையில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று நான் தெரிவித்தேன். அவ்வாறு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால், அது குறித்து நெதன்யாகுவிடம் தெரியப்படுத்துவேன். இல்லாவிட்டால், அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

கடந்த முறை ஈரான் ஒப்பந்தத்திற்கு உடன்படாமல் சென்றபோது அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு ஆளானது. இந்த முறை அவர்கள் நியாயமானவர்களாகவும், பொறுப்புள்ளவர்களாகவும் நடந்து கொள்வார்கள் என நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.