தெஹ்ரான்
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்ற நிலை காணப்படுகிறது.
இதனை தொடர்ந்து ஈரான் நடத்தி வரும் பதிலடி தாக்குதல்களால் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அவற்றின் படை தளங்கள் அமைந்த வளைகுடா நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால், பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட சிக்கல்கள் எழுந்துள்ளன. வளைகுடா நாடுகளில் வசிக்கும் பல்வேறு நாட்டு குடிமக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்நிலையில், ஹார்மூஸ் ஜலசந்தி பகுதி வழியே செல்லும் கப்பல்களுக்கு வரி விதிப்பது தொடர்பாக ஈரான் பரிசீலனை செய்து வருகிறது என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று கூறியுள்ளார்.
இதுபற்றி நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்று கொண்டு வரப்படும். இந்த பகுதியை சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு பயன்படுத்தி கொள்ளும் நாடுகள், எரிசக்தி, உணவு வினியோகத்திற்கான சரக்குகள் போன்றவற்றை கொண்டு செல்லும் கப்பல்களுக்கு ஈடாக, சுங்க கட்டணம் மற்றும் வரிகளை ஈரானுக்கு செலுத்த வேண்டியிருக்கும் என கூறினார்.
இதனை ஈரானின் மாணவர்களுக்கான செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது. ஈரானுக்கு தடை விதித்த நாடுகளுக்கு கடல்சார் கட்டுப்பாடுகளை விதிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த ஹார்மூஸ் ஜலசந்தியின் இருப்பிட நிலையை பயன்படுத்தி, மேற்கத்திய நாடுகளுக்கு நாங்கள் தடை விதிக்க முடியும். அந்த நீர்வழிகளின் ஊடே அவர்களுடைய கப்பல்களை செல்ல விடாமல் தடுக்க முடியும் என்று ஈரான் உச்ச தலைவருக்கான ஆலோசகர்களில் ஒருவரான முகமது மொக்பர் இன்று கூறினார்.