உலக செய்திகள்

இம்ரான் கான் பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கம் - விமான விபத்தில் இருந்து தப்பினார்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு அல்லது மோசமான வானிலை ஆகியவற்றின் காரணமாக விமானம் தரையிறக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது. இதையடுத்து இம்ரான் கான் விமான விபத்தில் இருந்து தப்பித்தார் என தகவல் வெளியானது.

பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து நேற்று தனி விமானத்தில் புறப்பட்டார். ஆனால் அவர் பயணித்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மீண்டும் இஸ்லாமாபாத் விமான நிலையத்திற்கு திரும்பியது.

இதையடுத்து, இஸ்லாமாபாத்தில் இருந்து சாலை மார்க்கமாகப் பயணித்து குஜ்ரன்வாலா சென்ற இம்ரான் கான், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

இது குறித்து விளக்கம் அளித்த இம்ரான் கான் கட்சியின் மூத்த தலைவர் அசார் மஷ்வானி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் தரையிறங்கியதாக வெளியான தகவல் தவறானது என்று தெரிவித்தார். இதன்மூலம், மோசமான வானிலையால் இம்ரான் கான் பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.