அபுதாபி,
ஈரான் மீது அமெரிக்கா , இஸ்ரேல் இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்சத்தலைவர் அயதுல்லா அலி காமேனி உள்பட 750க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலால் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க படைத்தளங்கள் உள்ள நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதனிடையே, தெலுங்கானா மாநிலம் ராஜன்னா சிர்சிலா மாவட்டம் பொதிரெடிபல்லி கிராமத்தை சேர்ந்த இளைஞர் ராஜேஷ்வரராவ். இவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள விமான நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்குமுன் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி விமான நிலையத்தை குறிவைத்து ஈரான் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் விமான நிலையத்தில் பணியாற்றி வந்த ராஜேஷ்வரராவ் உள்பட பலர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, ராஜேஷ்வரராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ராஜேஷ்வரராவ் தற்போது நலமுடன் உள்ளார். அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, ஈரான் தாக்குதலில் காயமடைந்த தனது மகனை அபுதாபியில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வர உதவ வேண்டுமென ராஜேஷ்வரராவின் குடும்பத்தினர் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.